செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேசத் தடயவியல் விசாரணைக்கு கனடாவிடம் சிறீதரன் எம்.பி. வலியுறுத்தல்

#SriLanka #CANADA #Investigation #International #sritharan #Chemmani Mass Grave
Abi
5 hours ago
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேசத் தடயவியல் விசாரணைக்கு கனடாவிடம் சிறீதரன் எம்.பி. வலியுறுத்தல்

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய சுயாதீனத் தடயவியல் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.

இச்சந்திப்பில், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் இந்தோ–பசிபிக் பிராந்தியத்துக்கான உதவிப் பிரதி அமைச்சர் வெல்டன் எப்., இலங்கைத் தொடர்புகளுக்கான பிரதிப் பணிப்பாளர் டெய்ட்ரே யூகிச் மற்றும் சிரேஷ்ட அதிகாரி அரியேல் சொபானி ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது, இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், நில ஆக்கிரமிப்பு, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 583 மனித எச்சத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி., இவ்விவகாரத்தில் உண்மைகள் வெளிக்கொணரப்படுவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய சுயாதீன விசாரணைகள் அவசியம் என வலியுறுத்தினார்.

மேலும், முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 171 ஏக்கர் பூர்வீகக் காணிகளையும், யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் உள்ள 2,117 ஏக்கர் காணிகளையும் அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தையிட்டி காணிப் பிரச்சினை, தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவங்கள் மற்றும் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுச் சிலை அகற்றப்பட்டமை ஆகிய விடயங்களும் கனேடிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறுவதில் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும் சிறீதரன் தலைமையிலான குழுவினர் எடுத்துரைத்தனர்.

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும் சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகள் ஊடாகக் கனடா தனது இராஜதந்திரப் பங்களிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதனிடையே, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம், கேப்பாப்பிலவு மற்றும் வலிகாமம் வடக்குக் காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான விரிவான ஆவணங்களைச் சிறீதரன் எம்.பி. கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடம் கையளித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!