குப்பை கொட்டுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை – கரைச்சி தவிசாளர்
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முறையற்ற வகையில் குப்பைகளைக் கொட்டுவதால் சுற்றுச்சூழலும் பொதுமக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், அனுமதியின்றி இரவு நேரங்களில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்காணிப்புக் கமராக்கள் மூலம் அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று மாலை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயத்தைத் தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய திருத்தங்களின் அடிப்படையில், முறையற்ற வகையில் குப்பைகளைக் கொட்டுவதற்கான அபராதத் தொகை முன்னர் இருந்த 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2027ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் தமது கழிவுகளைப் பாலிதீன், பிளாஸ்டிக், மக்கக்கூடிய கழிவுகள் மற்றும் கண்ணாடி எனத் தரம் பிரித்துப் பிரதேச சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுகாதாரத் தொழிலாளர் பற்றாக்குறையால் சவால்கள் கரைச்சி பிரதேச சபையின் சுகாதாரப் பணிகளை முன்னெடுப்பதில் பணியாளர் பற்றாக்குறை பெரும் சவாலாக இருப்பதாகவும் தவிசாளர் சுட்டிக்காட்டினார்.
பிரதேச சபையின் வழிகாட்டுதலின்படி 40 சுகாதாரத் தொழிலாளர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 11 பேர் மட்டுமே பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்குப் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், குப்பை அகற்றும் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் சிரமங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போதிய வாகனங்களும் நிதி வளங்களும் இருந்தபோதிலும், தேவையான பணியாளர்களைப் பெற்றுக்கொள்வதிலும் அவர்களைத் தொடர்ந்து பணியில் தக்கவைப்பதிலும் சவால்கள் நிலவுவதாகவும் தெரிவித்தார்.
பொதுமக்களிடம் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு கோரிக்கை பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் வணிக நிலையங்களில் உருவாகும் குப்பைகளை முறையாகச் சேமித்து, பிரதேச சபையின் குப்பை சேகரிப்பு வாகனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தவிசாளர் கேட்டுக்கொண்டார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், பிரதேசத்தைத் தூய்மையாகப் பேணுவதும் பிரதேச சபையின் பொறுப்பு மட்டுமல்ல எனக் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணுவதற்கும் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் முறையான கழிவு முகாமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.