வலி வடக்கு மக்களுக்கு தீபாவளி கருப்பு தினமாக மாறியிருப்பது கவலைக்குரியது – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந்த் ஆதங்கம்

#SriLanka #Protest #LANKA4 #HeavyRain #North
Abi
25 minutes ago
வலி வடக்கு மக்களுக்கு தீபாவளி கருப்பு தினமாக மாறியிருப்பது கவலைக்குரியது – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந்த் ஆதங்கம்

வலி வடக்கு மக்கள் தீபாவளி தினத்தையும் கறுப்பு தினமாகக் கருதி காணி விடுவிப்புக்காக வீதியில் போராடி வருவது துரதிர்ஷ்டவசமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வலி வடக்கில் பலாலி பிரதேச மக்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் காணி விடுவிப்புப் போராட்டத்தின் 21ஆவது வாரம், தீபாவளி தினமான கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், நரகாசூரன் என்ற அரக்கன் அழிக்கப்பட்ட நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் உலகெங்கும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வலி வடக்கு மக்கள் தமது சொந்தக் காணிகளை மீட்பதற்காகக் கறுப்பு தீபாவளியாக இன்றைய தினத்தைக் கடைப்பிடித்து போராடி வருகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

தமது காணிகள் விடுவிக்கப்படாத ஆதங்கத்துடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது இறுதிக்கிரியைகளும் இன்று இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்த போதிலும், இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், சுற்றுலா விடுதிகள் மற்றும் இராணுவ வைத்தியசாலை போன்றவையும் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

எனவே, மக்களின் நியாயமான காணி விடுவிப்புக் கோரிக்கையை அரசாங்கம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அடுத்த தீபாவளியையாவது மக்கள் தமது சொந்தக் காணிகளில் கொண்டாடும் சூழலை உருவாக்க வேண்டும் எனவும் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!