இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சர்வதேச ஊடகங்களின் ஆதரவு – அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு!
இலங்கையின் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்தில் பிரபலப்படுத்துவதற்கு முன்னணி சர்வதேச ஒலிபரப்பு நிறுவனங்கள் தமது ஊடக வலைப்பின்னல்கள் ஊடாக ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளதாக வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஆசிய – பசுபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் (ABU) 63ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சர்வதேச முன்னணி ஒலிபரப்பு நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்புகளின்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, இலங்கையின் சுற்றுலாத்துறையை சர்வதேச ஊடகங்கள் ஊடாக மேம்படுத்துதல், நாட்டின் இயற்கை அழகு, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் தலங்களை உலகளாவிய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்தச் சந்திப்புகளில் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேசப் பிரிவின் பொது முகாமையாளர் கிளேர் கோர்மன், சர்வதேச சேவைகளுக்கான தலைவர் நெஸ்ரின் பௌசைன், ஆபிரிக்க ஒன்றிய ஒலிபரப்பு அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிரெகோயர் என்ஜாகா மற்றும் சீனாவின் RTPRC நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமும் ABU அமைப்பின் உப தலைவருமான சோவ் ஜிஹொங் ஆகியோர் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்புகளில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இதற்கிடையில், இலங்கையின் விருந்தோம்பல், பாதுகாப்பு, இயற்கை அழகு மற்றும் மக்களின் அன்பான உபசரிப்பு ஆகியவற்றைச் சர்வதேச ஊடகப் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கொழும்பு நகரின் அழகு தங்களைக் கவர்ந்துள்ளதாகவும், இலங்கையில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் தங்களது எதிர்பார்ப்புகளையும் விஞ்சியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ABU பொதுச் சபை போன்ற சர்வதேச நிகழ்வுகளை இலங்கையில் நடத்துவதன் மூலம் நீண்டகால நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய நிகழ்வுகள் உலகளாவிய ஊடக வலைப்பின்னல்களுடன் நீடித்த தொடர்புகளை ஏற்படுத்துவதுடன், புதிய சுற்றுலாச் சந்தைகளை அணுகுவதற்கும் வாய்ப்புகளை உருவாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பொதுச் சபைக் கூட்டத்தின் ஊடாக இலங்கைக்கு பெறுமதியான சர்வதேச ஊடகக் கூட்டாண்மைகள் உருவாகியுள்ளதுடன், நாட்டின் சுற்றுலாத்துறையை உலகளவில் மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளும் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.