கொழும்பு துறைமுக நகரில் நாளை பறக்கிறது விமானி இல்லாத பயணிகள் ட்ரோன்
மின்சாரத்தில் இயங்கும், விமானி இல்லாத பயணிகள் ட்ரோன் சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான முதலாவது உத்தியோகபூர்வ சோதனை நாளை (11) கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் (Port City) நடைபெறவுள்ளது.
பயணிகள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் இத்தகைய ட்ரோன்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் EHang நிறுவனம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
eVTOL என அழைக்கப்படும் இந்த வகை மின்சார விமானங்கள், ஓடுபாதையின் உதவியின்றி செங்குத்தாக மேலெழுந்து பறக்கவும் தரையிறங்கவும் கூடிய தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.
இவற்றைச் சுற்றுலாத்துறை, பயணிகள் போக்குவரத்து மற்றும் அவசரகால சேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.