இலங்கையில் தாய்மார் இறப்பு விகிதம் குறைவு – தெற்காசியாவில் முன்னிலை!
உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச மதிப்பீடுகளின்படி, தாய்மார் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, உலகளவில் ஒரு இலட்சம் உயிர்ப்பிறப்புகளுக்கு 197 தாய்மார் உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இலங்கையில் இந்த எண்ணிக்கை 18 ஆகக் குறைந்துள்ளது.
தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை குறைந்த தாய்மார் இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் 80 ஆகவும், பங்களாதேஷில் 115 ஆகவும், நேபாளத்தில் 142 ஆகவும், பாகிஸ்தானில் 155 ஆகவும் தாய்மார் இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கையின் உள்நாட்டுப் புள்ளிவிபரங்களின்படி, ஒரு இலட்சம் உயிர்ப்பிறப்புகளுக்கான தாய்மார் இறப்பு விகிதம் 2021ஆம் ஆண்டில் 47 ஆகவும், 2022ஆம் ஆண்டில் 33 ஆகவும், 2023ஆம் ஆண்டில் 25 ஆகவும் பதிவாகியுள்ளது.
குறிப்பாக, 2023ஆம் ஆண்டில் மாத்திரம் நாட்டில் 62 தாய்மார் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச சுகாதார சேவை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான முன்கூட்டிய சுகாதாரப் பரிசோதனைகள், குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மருத்துவமனைகளில் வழங்கப்படும் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சேவைகள் ஆகியவை இந்த முன்னேற்றத்திற்குப் பிரதான காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
சர்வதேச ரீதியில் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ள போதிலும், ஒவ்வொரு தாயின் உயிரிழப்பும் ஒரு குடும்பத்திற்கும் பிறக்கவிருக்கும் குழந்தையின் எதிர்காலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, தாய்மார் இறப்பு விகிதத்தை மேலும் குறைத்து, ஒவ்வொரு தாயும் பாதுகாப்பாகக் குழந்தையைப் பெற்றெடுப்பதை உறுதிப்படுத்துவதே நாட்டின் முக்கிய இலக்காக அமைய வேண்டும்.