காதலும் இல்லை, கவலையும் இல்லை – இன்று உலக தனிநபர்கள் தினம்!
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11ஆம் திகதி உலகளாவிய ரீதியில் 'உலக தனிநபர்கள் தினம்' (Singles Day) கொண்டாடப்படுகிறது.
காதல் உறவில் இல்லாதவர்கள் மற்றும் திருமணமாகாத தனிநபர்களின் சுயாதீன வாழ்க்கையைக் கொண்டாடும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தினம், இன்று உலகளாவிய இணையவழி வர்த்தகத்தின் முக்கியமான நிகழ்வாகவும் மாறியுள்ளது.
சீனாவில் தோற்றம் பெற்ற இந்தக் கொண்டாட்டம், '11.11' என்ற பெயரிலும் பிரபலமாகியுள்ளது.
நவம்பர் 11ஆம் திகதியின் 11.11 என்ற இலக்கங்கள் தனித்தனியாக நிற்கும் நான்கு எண்களைக் குறிக்கின்றமையால், அவை தனிநபர்களின் அடையாளமாகக் கருதப்பட்டன.
1990களில் சீனப் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இந்தக் கொண்டாட்டம் பிரபலமடைந்ததுடன், காதல் உறவில் இல்லாதவர்கள் தங்களுக்கான நாளாக இதனை அனுஷ்டிக்கத் தொடங்கினர்.
எனினும், 2009ஆம் ஆண்டு சீனாவின் அலிபாபா (Alibaba) நிறுவனம் நவம்பர் 11ஆம் திகதியை இணையவழி விற்பனை ஊக்குவிப்பு நாளாக அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, 'சிங்கிள்ஸ் டே' உலகின் மிகப்பெரிய இணையவழி விற்பனை நிகழ்வுகளில் ஒன்றாக வளர்ச்சியடைந்தது.
இதனை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு இணையவழி வர்த்தக நிறுவனங்கள் விசேட விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
ஆடை, இலத்திரனியல் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு விசேட தள்ளுபடிகளும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
சீனாவைத் தாண்டி ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு பிராந்தியங்களிலும் இந்த விற்பனைத் திருவிழா தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தனிநபர்களின் சுயாதீன வாழ்க்கையைக் கொண்டாடும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நவம்பர் 11ஆம் திகதி, இன்று உலகளாவிய வர்த்தகத் துறையில் முக்கியத்துவம் பெற்ற தினமாகப் பரிணமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.