2027 வரவு செலவுத் திட்ட இறுதி வரைவை இன்று பரிசீலித்தார் ஜனாதிபதி அநுர!
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் பரிசீலித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவும் கலந்துகொண்டுள்ளார்.
டித்வா அனர்த்தம் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடி உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும், முறையான முகாமைத்துவம் மற்றும் நிதி ஒழுக்கத்தின் ஊடாக நாட்டின் பல பிரதான பொருளாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பொருளாதாரத்தை மேலும் விரிவுபடுத்தி மாற்றமிக்க அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில், 2,000 பில்லியன் ரூபா முதலீட்டு ஒதுக்கீடுகளுடன் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த வரவு செலவுத் திட்டத்தை நாளை (12) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.