அனோஜன் சிவராசா விடுதலை - விரைவில் இலங்கை அழைத்து வர நடவடிக்கை

#SriLanka #LANKA4 #release #SaudiArabia #L4 #SivarasaAnojan #DeathPenalty
Prasu
8 hours ago
அனோஜன் சிவராசா விடுதலை - விரைவில் இலங்கை அழைத்து வர நடவடிக்கை

சவூதி அரேபியாவில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்த இலங்கை பிரஜை அனோஜன் சிவராசா, அவர் மீதான வழக்கை கைவிட சவூதி அரேபியாவின் பொது வழக்குத் தொடரும் அலுவலகம் (Public Prosecution) தீர்மானித்ததைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்திருந்தது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், அனோஜன் மீது சவூதி நீதிமன்றத்தில் தற்போது எந்த வழக்கும் இல்லை என்றும் அவர் இன்னும் காவலில் இருந்தாலும் ஓரிரு வாரங்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினர் இன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு வருகை தந்து, தமது மகனின் விடுதலையை உறுதி செய்வதற்காக ஜனாதிபதி, அமைச்சு மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளும் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் அர்ப்பணிப்புக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர் என்று அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சரியான வழிகாட்டல், அவரது இராஜதந்திர தலையீடு மற்றும் பிற இராஜதந்திர அதிகாரிகளின் முயற்சிகளின் மூலமே அனோஜனின் விடுதலை சாத்தியமானது என்று அமைச்சர் ஹேரத் தெரிவித்தார்.

மேலும், சவூதி அரேபிய அரசாங்கம் மற்றும் நீதித்துறை, சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் இராஜதந்திர நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள், அத்துடன் இந்த விவகாரத்தில் உதவுவதற்காக சவூதி அரேபியாவுக்குச் சென்ற சட்டத்தரணிகள் குழு ஆகியவற்றின் பங்களிப்பையும் அமைச்சர் பாராட்டினார்.

பேஸ்புக் பதிவு ஒன்றில் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் இருந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், சவூதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், 2026 செப்டம்பர் 17 அன்று அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.

இராஜதந்திர மற்றும் பிற தலையீடுகளைத் தொடர்ந்து, 2026 அக்டோபர் 14 அன்று சவூதி நீதிமன்றம் அந்த மரண தண்டனையை ரத்து செய்தது. இருப்பினும், அவர் மீதமுள்ள தண்டனைகளிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.

இந்த தொடர்ச்சியான முயற்சிகளின் பலனாக, 2026 நவம்பர் 9 அன்று, சவூதி அரேபியாவின் பொது வழக்குத் தொடரும் அலுவலகம், அவர் மீதான சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டாம் என்று தீர்மானித்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!