2027 வரவு செலவுத் திட்டம்: இன்று ஆரம்பமாகும் விவாதம் – நவம்பர் 20ஆம் திகதி முக்கிய வாக்கெடுப்பு!
2027ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (13) ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இதன் மீதான வாக்கெடுப்பு நவம்பர் 20ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
அதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இதில் நான்கு சனிக்கிழமைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்ட விவாதக் காலப்பகுதியில், பாராளுமன்ற அமர்வுகள் தினமும் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.
காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான 5 கேள்விகளுக்கும், 10.30 மணி முதல் 11.00 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும்.
மேலும், வாக்கெடுப்பு நடைபெறும் நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 14 ஆகிய தினங்களைத் தவிர்ந்த ஏனைய நாட்களில் மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.