ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி சர்ச்சைக்கு நீதிமன்றமே தீர்வு – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

#SriLanka #Election #LANKA4 #Court
Mithra
29 minutes ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி சர்ச்சைக்கு நீதிமன்றமே தீர்வு – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் நிலவி வரும் சர்ச்சைக்கு நீதிமன்றத்தின் ஊடாகவே சட்டரீதியான தீர்வைப் பெற்றுக்கொள்வது பொருத்தமானது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியாகி வரும் பல்வேறு தகவல்களுக்கு விளக்கமளித்து, தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பான பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்காக, கட்சியின் தலைவர் சட்டத்தரணி நிமல் சிறிபால டி சில்வா, செயலாளராகப் பணியாற்றும் துமிந்த திசாநாயக்க, பொருளாளர் லசந்த அழகியவண்ண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர ஆகியோர் கடந்த நவம்பர் 6ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

இதன்போது, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பில் இரு தரப்பினரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த சர்ச்சைக்கு நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்வைப் பெற்றுக்கொள்வதே பொருத்தமானது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியல்ல என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவே காணப்படுவதாகவும், தற்போது நிலவும் சர்ச்சை கட்சியின் செயலாளர் பதவி தொடர்பான பிரச்சினை மாத்திரமே எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நேற்று விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலின் பின்னர், தயாசிறி ஜயசேகர ஊடகங்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படும் சில கருத்துக்கள் தவறானவை என கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், குறித்த கருத்துக்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சரியான தகவல்களைப் பகிரங்கப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கட்சி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், செயலாளர் பதவி தொடர்பான விவகாரம் தற்போது மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு வெளியான பின்னர் அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதே பொருத்தமானது என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!