திறைசேரியில் பணம் குவிவதால் மட்டும் பொருளாதாரம் வளராது – ஹர்ஷ டி சில்வா!
திறைசேரியின் வருமானத்தை அதிகரிப்பதால் மாத்திரம் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையாது. மக்களின் கைகளுக்குப் பணம் சென்றடைவதுடன், புதிய தொழில்வாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் சீராக இயங்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் வறுமை நிலை அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், பாடசாலை மாணவர்களில் 28 சதவீதமானோர் பகல் உணவின்றிப் பாடசாலைகளுக்குச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான பெற்றோர் தமது குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை, பல பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காகத் தங்களது உணவைக் குறைத்துக்கொள்ளும் அவலநிலையும் காணப்படுகின்றது.
இதுவே நாட்டின் தற்போதைய உண்மையான நிலைமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய எந்தவொரு முன்மொழிவும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், மக்களைப் பொருளாதார நெருக்கடிக்குள் வைத்துக்கொண்டு திறைசேரியை நிரப்பியுள்ளதாகக் கூறுவதால் சமூகக் கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், நாட்டில் மக்கள் போராட்டங்கள் உருவாகும் என்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.