காற்றின் தரம் மோசமடைந்தது – யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சுகாதார எச்சரிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை (19) காலை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, யாழ்ப்பாணத்தின் காற்றின் தரக் குறியீடு 200 என்ற எல்லையைக் கடந்துள்ளது.
அத்துடன், இன்று காலை 7.05 மணியளவில் பதிவான தரவுகளின்படி, பத்தரமுல்லையில் 179 ஆகவும், சிலாபத்தில் 165 ஆகவும், கிளிநொச்சி மற்றும் அநுராதபுரத்தில் தலா 158 ஆகவும், திருகோணமலையில் 151 ஆகவும் காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.
குறித்த பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய மட்டத்தில் காணப்படுவதால், பொதுமக்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனையடுத்து, சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை பாதிப்புகளைக் கொண்டவர்கள் KN95 ரக முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் தேவையற்ற வகையில் திறந்தவெளிகளில் நடமாடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன