இடியுடன் கூடிய மழை தாக்கம் - நாட்டின் 14 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கத்திற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதற்கமைய, அம்பாறை, பதுளை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 14 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (22) முற்பகல் 11.31 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.