புதிய பொலிஸ் சீருடை வடிவமைப்புகள் குறித்து அரசாங்கம் ஆலோசிக்கவில்லை – அமைச்சர்!
சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வரும் உத்தேச பொலிஸ் சீருடை வடிவமைப்புகள் தொடர்பில் அரசாங்கம் எந்தவித கலந்தாலோசனைகளையும் முன்னெடுக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரலகன்வில பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், தற்போதைய பொலிஸ் சீருடையில் மாற்றங்களைக் கொண்டுவருவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
எனினும், சமூக ஊடகங்களில் வெளியாகும் வடிவமைப்புகள் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.
சீருடை மாற்றத்தை விட பொலிஸ் சேவையில் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதே முக்கியம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பொலிஸாரின் நடத்தை, கடமையாற்றும் விதம் மற்றும் பொதுமக்களுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், புதிய சீருடையுடன் பழைய நடைமுறைகளைத் தொடர்வதை விட, திறமையும் தொழில்முறை ஆற்றலும் கொண்ட மேம்பட்ட பொலிஸ் சேவையே நாட்டுக்குத் தேவை எனவும் அவர் தெரிவித்தார்.