நாளை வழமைபோல் பேருந்து சேவைகள் இயங்கும் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் நாளை (30) திங்கட்கிழமை வழமைபோல் உரிய நேர அட்டவணைக்கு அமைய சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் பேருந்து சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் கடமைக்குச் சமூகமளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, பயணிகளுக்கு எவ்வித அசௌகரியங்களும் இன்றி தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை பல அரச ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால், அரச நிறுவனங்களின் சேவைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையிலும், பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைத் தடையின்றி நிறைவேற்றும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் நாளை பணியில் ஈடுபடுவார்கள் என அதன் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.