ஒவ்வொரு இரவும் விடைதெரியாத கனவுகள்
Nila
3 years ago

இந்த நாட்களென்ற காலம்
வேறொரு பெயரோடு
ஓடுவதற்கு தயாராகின்றது.
வாழ்வின் பயம்
கண்களுக்குள் விடையில்லாத முடிச்சை
பாதுகாப்பாய் பத்திரப்படுத்துகிறது
வானவெளியெங்கும்
மரணவிதைகள் முளைத்துத் தொங்குகின்றன
இறுக்கம் தளர்ந்து
இயல்பாய் வாழ முடியவில்லை
பூமியின் மனக்குழிக்குள்
அவநம்பிக்கைகள் விதைத்திருக்கையில்
புதியதோர் எழுத்தை எப்படி எழுதத்தொடங்குவது.
ஒன்றிலிருந்து
இன்னொன்றிற்குக் கடக்கையில்
நுகர்பயமே கூட வருகையில்
வாழ்வை எப்படி நுகர்வது
கால்களுக்குள் விருப்பமில்லாது
விலகிச்செல்லும் ஒன்றை மறந்து
இன்னொரு நதியில்
நனையத் தொடங்குகிறோம்
ஆனால்
காலம் தனக்குள்ள
நகைத்துக்கொண்டிருக்கிறது
விருப்பமில்லாது
திணிக்கின்ற பொழுதை
கண்களை மூடிக்கொன்றாவது
கடந்துவிடவேண்டும்



