இலங்கை முதலாவது ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனா வரலாறு

இலங்கை முதலாவது ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனா வரலாறு

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலம் முக்கிய பாத்திரம் வகித்தவர்தான் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன. இவர் இந்நாட்டின் சமூகப் பொருளாதார அரசியல் மேம்பாட்டுக்காக சுதந்திரத்திற்கும் முன்னரும் சுதந்திரத்திற்கு பின்னரும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார். 1932 இல் அரசியலில் பிரவேசித்த இவர், 1989 இல் அரசியலிலிருந்து ஒய்வு பெறும் வரையும் இந்நாட்டுக்காக உழைத்த மாபெரும் அரசியல் தலைவராகவும் விளங்குகின்றார்.

இவ்வாறு சிறப்புற்று விளங்கும் மறைந்த ஜே. ஆர். ஜயவர்தன 1906 செப்டம்பர் 17 ஆம் திகதி பிறந்தார். அன்றைய சட்டத்தரணியும் பிரதம நீதியரசருமான ஈ. வில்பர்ட் ஜயவர்தன மற்றும் எக்னஸ் ஹெலன் தம்பதியினருக்கு முதலாவது பிள்ளையாகப் பிறந்த இவர் பதினொரு சகோதர சகோதரிகளைகளைக் கொண்டவராவார்.

கல்வியிலும் விளையாட்டிலும் ஆர்வம்

ஜே. ஆர். தம் ஆரம்பக் கல்விக்காக கொழும்பு றோயல் கல்லூரியில் பிரவேசித்தார். அங்கு சிறுபராயம் முதலே கல்வியிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வத்தைக் காட்டிய இவர் திறமைகளையும் வெளிப்படுத்தினார். அத்தோடு பேச்சு போட்டிகளிலும் பங்குபற்றி தம் திறமைகளை வெளிப்படுத்தவும் அவர் தவறவில்லை.

இவ்வாறான நிலையில் 1921 இல் கொழும்பு றோயல் கல்லூரியின் சமூக சேவை லீக் என்ற அமைப்பின் தலைவரான இவர் இக்கல்லூரியின் கிரிக்கெட் அணியிலும் அங்கம் வகித்தார். 1925 இல் இக்கல்லூரி கிரிக்கெட் அணியின் கப்டனாக நியமிக்கப்பட்ட இவர் கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணியிலும், குத்துச் சண்டை அணியிலும், சாரணர் இயக்கத்திலும் அங்கம் வகித்தார்.

அதேநேரம் கல்லூரியின் மாணவத் தலைவர் பதவியை வகித்த இவர் றோயல் கல்லூரி மாணவர் யூனியனின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். இதேகாலப்பகுதியில் அதாவது 1926 இல் கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் உயர் கல்விக்காக தெரிவான இவர் அங்கும் கல்வியில் மாத்திரமல்லாமல் விளையாட்டிலும் அபார திறமைகளை வெளிப்படுத்தியதோடு 1928 இல் இலங்கை சட்டக் கல்லூரியில் பிரவேசித்த இவர் 1932 மார்ச் மாதம் வழக்கறிஞரானார். 1935 இல் தான் சட்டத்தரணியாக உத்தியோகபூர்வமாகக் கடமையாற்றத் தொடங்கினார். இக்காலப்பகுதியில் தான் எலினா பண்டார ரூபசிங்கவுடன் திருமண வாழ்வில் இணைந்தார்.. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் கிடைக்கப் பெற்றது. அதுவே ரவி ஜயவர்தனவாகும்.

அரசியல் பிரவேசம்

அதேநேரம் இந்திய தேசியக் காங்கிரஸின் அரசியல் செயற்பாடுகளில் கவரப்பட்ட இவர் 1938 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் ஊடாக அரசியலில் பிரவேசித்தார். நாட்டின் சுதந்திரத்திற்கான அரசியலில் செயற்பாடுகளில் தீவிரமாக செயற்பட்டு வந்த இவர் 1940 களில் இக்காங்கிரஸின் இணைச் செயலாளரானார். இதேகாலப்பகுதியில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே. ஆர் 1943 இல் களனிக்காக நடைபெற்ற தேர்தலிலும் வெற்றியீட்டினார். அதனூடாக இவர் அரச பேரவைப் பிரதிநிதியானார்

இதேவேளை சுதந்திரத்திற்காக உழைத்து வந்த தலைவர்கள் நாட்டுக்கு தேசியக் கட்சியொன்றின் அவசியத்தை உணரத் தொடங்கினர். இவ்வாறான பின்புலத்தில் தான் 1946 செப்டம்பர் 06 இல் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. இக்கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஜே. ஆரும் ஒருவராவார்.

இச்சூழலில் 1947 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் இந்நாட்டின் முதலாவது பிரதமரான டி. எஸ். சேனநாயக்காவின் அரசாங்கத்தில் நிதியமைச்சரானார். இப்பதவி மிக முக்கியமானதும் பொறுப்பு மிக்கதும் என்பதை நன்குணர்ந்திருந்த ஜே. ஆர் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வந்தார்.

இவ்வாறான சூழலில் இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு தாக்குதலுக்கு இலக்கான ஜப்பானின் அமைதி உடன்படிக்கைக்கான மாநாடு 1951 இல் சான்பிரான்சிகோவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய குழுவுக்கு ஜே. ஆர். தலைமை தாங்கினார். அவர் இம்மாநாட்டில் ஜப்பானுக்கு சார்பான நிலைப்பாட்டை எடுத்ததோடு. அதனடிப்படையில் அங்கு உரையும் நிகழ்த்தினார். இதன் விளைவாக ஜப்பான் இலங்கைக்கு மிக நெருக்கமான நண்பராக ஆனதோடு மாத்திரமல்லாமல் இந்நாட்டுக்கு பல தசாப்தங்களாகத் தொடர்ந்தும் உதவி ஒத்துழைப்புக்களை நல்கி வருகின்றது.

இதேவேளை 1952 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் ஐ.தே.க. வெற்றி பெற்றதோடு அவ்வரசாங்கதிலும் ஜே.ஆர். மீண்டும் நிதியமைச்சரானார். என்றாலும் 1953 இல் அரிசி நிவாரணத்தைக் குறைக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஹர்த்தால் காரணமாக பிரதமர் டட்லி சேனாநாயக்கா தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமரான சேர் ஜோன் கொதலாவலவின் அமைச்சரவையில் ஜே.ஆர் விவசாயம், உணவத்துறை அமைச்சராகவும் பாராளுமன்ற சபை முதல்வராகவும் நியமிக்கப்பட்டார். இருப்பினும் 1956 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.க. தோல்வியுற்றது. அதனால் அக்கட்சியின் பிரதம அமைப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கட்சியின் மேம்பாட்டுக்காக கிராமம் நகரம் என்று பாராது இரவு பகலாகக் கட்சிக்காக உழைத்தார். இதனால் 1960 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.க. வெற்றியீட்டியதோடு டட்லி மீண்டும் பிரதமரானார். இச்சமயம் ஜே.ஆருக்கு இராஜாங்க உல்லாசப் பயணத்துறை அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் பதவியேற்று மூன்று மாதங்களில் மீண்டும் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.க. தோல்வியுற்றது. என்றாலும் 1965 இல் நடந்த தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றதோடு மீண்டும் ஜே.ஆருக்கு உல்லாச பயணத்துறை இராஜாங்க அமைச்சுப் பதவியே வழங்கப்பட்டது.

இப்பதவியின் ஊடாக உல்லாசப் பயணத்துறைக்கு புத்துயிர் அளிப்பதில் அதிக கவனம் செலுத்திய இவர் வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டுவதற்கான சிறந்த துறையாகவும் கருதி பல்வேறு வேலைத்திட்டங்களையும் அவர் முன்னெடுத்துதார்.

என்றாலும் 1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.க மீண்டும் தோல்வியுற்றது. ஆயினும் ஜே. ஆர். எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். இக்காலப்பகுதியில் முன்னாள் பிரதமரும் கட்சித் தலைவருமான டட்லி நோய்வாய்பட்டு 1973 இல் காலமானார். அதனைத் தொடர்ந்து ஐ.தே.க வின் தலைமைப் பதவியும் ஜே.ஆருக்கு கிடைக்கப் பெற்றது. இவர் கட்சித் தலைமையை ஏற்றதோடு கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் நோக்கில் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

இவ்வாறான நிலையில் 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தல் காலத்தில் அன்றைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்த ஜே.ஆர். நாட்டுக்கு புதிய கவர்ச்சிகரமான பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதாக மக்களுக்கு வாக்களித்தார். அதனால் 77 இல் நடைபெற்ற தேர்தலில் ஐந்திலாறு பெரும்பான்மையைப் பெற்று ஐ.தே.க. வென்றது. இதனூடாக ஜே. ஆர். பிரதமரானார்.

முதலாவது ஜனாதிபதி

என்றாலும் சொற்ப காலத்தில் நாட்டுக்கு இரண்டாவது குடியரசு யாப்பை அறிமுகப்படுத்திய ஜே.ஆர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதியாக 1978 பெப்ரவரி 04 திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இதனூடாக இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக இவர் திகழ்கின்றார். அதேநேரம் நாட்டுக்கு திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்திய இவர் வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்காக கட்டுநாயக்கா மற்றும் பியகம சுதந்திர வர்த்தக வலயங்களைத் தொடங்கினார்.,

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை ஆரம்பித்தார். ஏழை மக்களுக்கான உணவு முத்திரைத் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடப் புத்தகத் திட்டம், மஹபொல புலமைப்பரிசில் திட்டம், கம்உதாவ வீடமைப்புத் திட்டம் என்பனவும் இவரது திட்டங்களே. அதேநேரம் கொத்மல, ரன்தெனிகல, ரன்தென்பே, உல்ஹிட்டிய ஆகிய நீர் மின் உற்பத்தித் திட்டங்களும் இவரால் ஆரம்பிக்கட்டவையே.

இவ்வாறு பாரிய சமூக, உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுத்த ஜே.ஆர். 1979 இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தின் இறுதிப் காலத்தில் (1976 இல்) பாராளுமன்ற ஆயுளை நீடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியைக் காரணம் காட்டி அவரது குடியுரிமையை 6 வருடங்களுக்கு இரத்துச் செய்தார்.

அதேநேரம் 1982 இல் டிசம்பரில் சர்வஜன வாக்குரிமையை நடாத்தி தனது பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீடித்தார். இவரது பதவிக் காலத்தில் தான் 1983 ஜூலைக் கலவரம் இடம் பெற்றதோடு தமிழ் ஆயுதப் போராட்டமும் தீவிரமடைந்தது. இதனைத் தொடர்ந்து பொலிஸ்துறையில் விசேட அதிரடிப்படையையும் இவர் உருவாக்கினார். அத்தோடு மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியும் இவரது காலத்தில் தலைதூக்கியது.

இவ்வாறான சூழலில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இலங்கை இந்தியா ஒப்பந்தத்தில் கைக்சாத்திட்டார். அதனூடாக அரசியல் அமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் நாட்டிற்கு மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தினார். ஆனால் புலிகள் இயக்கத்தினர் இதனை நிராகரித்தனர். அத்தோடு இந்திய அமைதிகாக்கும் படையையும் இலங்கைக்கு வரவழைத்தார்.

இவ்வாறு இந்நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றி வந்த ஜே.ஆர். அமெரிக்கா சார்பு கொள்கையையே கடைபிடித்தார். என்றாலும் 1989 இல் தமது 82 வது வயதில் இவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். இவ்வாறு இந்நாட்டுக்காக அரைநூற்றாண்டுக்கும் மேலாக அர்ப்பணிப்போடு உழைத்த ஜே.ஆர். 1996 நவம்பர் 01 ஆம் திகதி காலமானார். என்றாலும் அவரது சேவைகள் இந்நாட்டு வரலாற்றில் அழியாத்தடம் பதித்தவை என்றால் அது மிகையாகாது.