ரிஷாத் மிரட்டியதாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்த வைத்தியர் !

#Rishad Bathiudeen
Keerthi
4 years ago
ரிஷாத் மிரட்டியதாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்த வைத்தியர் !

உமது காருடன் வைத்து உன்னை சாம்பராக்கி விடுவேன் என ரிஷாத் மிரட்டியதாக பொலிசாரிடம் வைத்தியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் சிறைச்சாலைகள் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை 3 சிறைச்சாலை அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் 3 ஆம் இலக்க விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த தலைமையிலான சிறப்புக் குழுவினர் இந்த வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
பிரதான சிறைக் காவலர் ஒருவரிடமும் சிறைச்சாலைகள் மேற்பார்வையாளர்கள் இருவரிடமும் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் கூறினர். சம்பவதினம், வைத்தியரை குறித்த மருந்து வழங்கும் இடத்துக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர், சம்பவத்தை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை அங்கிருந்து அப்புறப்படுத்திய சிறைக் காவலர், மேற்பார்வையாளர் ஆகியோரிடமே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த 15 ஆம் திகதி வழக்கம்போல தான், சிறைச்சாலை மருந்தகத்தில் மருந்து கொடுத்துக் கொண்டு இருந்ததாகவும், கொவிட் -19 19 நிலைமை காரணமாக மருந்தகத்துக்குள் எவரையும் அனுமதிக்காது, அங்குள்ள ஜன்னல் வழியேயே நோயாளர்களான கைதிகளை பரீட்சித்து மருந்து கொடுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் வைத்தியர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இதன்போது ஒவ்வொருவராகவே அழைத்து மருந்து கொடுக்கப்பட்டதாகவும், திடீரென அங்கு வந்த ரிஷாத் பதியுதீன், ‘ நீங்கள் என்ன பெரிய டாக்டரா?, நான் எதற்காக இங்கு வந்துள்ளேன் தெரியுமா? உங்களை ஒரு மணி நேரத்துக்குள் என்னால் இடமாற்றம் செய்ய முடியும்.
எனக்கு ஆளும், எதிர்க கட்சிக்குள் எவ்வளவு ஆதரவு உள்ளது தெரியுமா? எனக்கு வேண்டிய வைத்தியரை நான் இங்கு அழைத்து வரலாம் உமது காருடன் வைத்து உன்னை சாம்பராக்கி விடுவேன்… அப்படிச் செய்தால் உங்கள் மனைவி, பிள்ளைகள் அனாதரவாகி விடுவார்கள். ஞாபகம் வைத்துக்கொள் நான் ரிஷாத் பதியுதீன்’ என மிரட்டியதாக வைத்தியர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்படும்போது, வைத்தியரின் உதவிக்காக அவ்விடத்தில் கைதி ஒருவரும், பிறிதொரு சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் இருந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டதுடன், குறித்த கைதியை நீதிமன்றுக்கு அழைத்து, அவரிடம் நீதிமன்றில் வைத்து சாட்சியம் பதிவு செய்ய அனுமதி பெற்றுத் தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்..
அதன்படி, நாளை 25 ஆம் திகதி, குறித்த கைதியிடம் வாக்குமூலம் பெற விசாரணையாளர்கள் நடவடிக்கை முன்னெடுத்துள்ள நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த கைதியை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ச் செய்யவுள்ளதாக அறியமுடிகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4