தமிழர் தாயக ஆக்கிரமிப்பை எடுத்துக்காட்டும் 'தாய் நிலம்‘: சம்பந்தன்– விக்கி கூட்டாக ஆரம்பித்து வைப்பர்!

#R. Sampanthan
Prathees
4 years ago
தமிழர் தாயக ஆக்கிரமிப்பை எடுத்துக்காட்டும் 'தாய் நிலம்‘: சம்பந்தன்– விக்கி கூட்டாக ஆரம்பித்து வைப்பர்!

தமிழ் மக்களின் தாயகமான வடக்கு - கிழக்கில் காலம் காலமாக அரசுகள் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும்  ‘தாய்நிலம்: நில அபகரிப்பு – இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று' என்ற ஆவணப் படம் நாளை சனிக்கிழமை மாலை இலங்கை நேரப்படி 5.30 மணிக்கு (இலண்டன் நேரம் பிற்பகல் 1.00 மணி,  டொரண்டோ மற்றும் நியுஜேர்சி நேரம் காலை 8 மணி) திரையிடப்படவுள்ளது.

இந்த ஆவணப்படத்தை சோமீதரன் இயக்கியுள்ளார். இந்த ஆவண பட திரையிடல் நிகழ்வைத் தொடர்ந்து ‘இலங்கையின் இனஞ்சார்ந்த நில ஆக்கிரமிப்பு: முறைகள், விளைவுகள் மற்றும் தமிழ் நில பாதுகாப்பு’ என்ற இணையவழி கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் இந்தியாவில் 30 வருடங்களுக்கு மேலாக மக்களின் நில உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளரான கலாநிதி மேதா பட்கார் அம்மையார், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்  ராமு மணிவண்ணன், அமெரிக்காவின் ஓக்லாந்து நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுராதா மிட்டால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்வில் இஸ்ரேல் நாட்டில் இருந்து பேராசிரியர் ஓரன் யிப்டசெல் அவர்கள் முதன்மை உரை ஆற்றுவார்.

இந்தக் குழு விவாதத்தைத் தொடர்ந்து ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட கனடாவின் புகழ்பெற்ற  இசைக் கலைஞரான ஷான் வின்சென்ட் டி போலின் இசை நிகழ்வு ஒன்று 20 நிமிடங்களுக்கு இடம்பெறும்.

ஆவணப் படம் திரையிட்ட பின்னர், அந்தப் படம் தொடர்பான ஆய்வு ரீதியான  கலந்துரையாடல் ஒன்றில் இளையோர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்தக் கலந்துரையாடலில் பிரித்தானியா, தமிழ் நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து இளையோர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த நிகழ்வை நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரனுடன் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூட்டாக ஆரம்பித்துவைப்பார்கள்.

தாய்நிலம் என்ற இந்த ஆவண படத்தை தமிழ் மக்கள் அனைவரும்  அவசியம் பார்க்கவேண்டும் என்றும், அதன்பின்னர் நடைபெறும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவேண்டும் என்றும், இந்த நிகழ்வையும் ஆவணப் பட வெளியீட்டையும் ஏற்பாடு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

"நாளை சனிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிமுதல் சில மணி நேரங்களுக்கு உங்கள் நேரத்தை தயவுசெய்து ஒதுக்கிவைத்து இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4