IPL Match43 - பெங்களூரு அணிக்கு 150 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
2021 ஐபிஎல் தொடரின் 43-வது போட்டியில், கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் துபாய் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில், 149 ரன்கள் எடுத்துள்ளது ராஜஸ்தான் அணி.
முதலில் பேட்டிங் களமிறங்கிய ராஜஸ்தானுக்கு எவின் லூயிஸ், ஜேஸ்வால் ஆகியோர் ஓப்பனிங் இறங்கினார். அதிரடியாக தொடங்கிய இந்த இணை சிக்சர்களை தெறிக்கவிட்டனர். இதனால், 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்று நல்லதொரு தொடக்கத்தை கொடுத்தது இந்த இணை. ஆனால், 9வது ஓவரில் கிறிஸ்டியன் தந்த ப்ரேக் - த்ரூவால் முதல் விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணிக்கு, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது.
அதில் இருந்து, ஒவ்வொரு ஓவருக்கு ஒரு முக்கிய வீரர் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாடி வந்த எவின் லூயிஸ், லோம்ரோர், சஞ்சு சாம்சன், ராகுல் தெவாத்தியா, லியம் லிவிங்ஸ்டன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மோரீஸ், ரியான் பராக் இணை கடைசி ஓவர்களில் ரன் சேர்த்தனர். ஆனால், டெத் ஓவர் வீச வந்த ஹாட் - ட்ரிக் ஸ்பெஷலிஸ்ட் ஹர்ஷல் பட்டேல், இந்த போட்டியில் ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்து ரியான், மோரீஸின் விக்கெட்டுகளை எடுத்தார். இதனால், 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது ராஜஸ்தான்.
பெங்களூரு அணி பெளலர்களைப் பொருத்தவரை ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளும், சஹால், ஷபாஸ் அகமது, ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கிறிஸ்டியன், ஜார்ஜ் கார்டன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
நடப்பு சீசனின் இரண்டாம் பாதி போட்டிகள் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 3 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, இரண்டில் தோல்வியைத் தழுவி மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் ப்ளே ஆஃப் ரேஸில் களம் கண்டுள்ளது. இன்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் பெங்களூருவின் ப்ளே ஆஃப் வாய்ப்பு அதிகமாகும்.
ராஜஸ்தானைப் பொருத்தவரை, இந்த சீசனின் இரண்டாம் பாதியில் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய ராஜஸ்தானுக்கு அடுத்த இரண்டு போட்டிகள் கைகொடுக்கவில்லை. புள்ளிப்பட்டியலில் பின் தங்கி இருப்பதால், இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள முடியும்.