IPL Match46 - மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய டெல்லி காப்பிடல்ஸ் அணி
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
14-வது ஐபிஎல் சீசனின் 46-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதன்படி, முதலில் பேட் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.
130 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர்.
தவான் (8 ரன்கள்) 2-வது ஓவரில் ரன் அவுட் ஆனார். கிருனால் பாண்டியா வீசிய 3-வது ஓவரில் பிரித்வி ஷா (6) ஆட்டமிழந்தார். இதிலிருந்து மீள்வதற்குள் ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்களுக்கு கூல்டர் நைல் பந்தில் போல்டானார்.
எனினும், கேப்டன் ரிஷப் பந்த் பெரிய ஷாட்களை ஆடி நெருக்கடியை மும்பை பக்கமே வைத்திருந்தார். ஆனால், அவரும் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஜெயந்த் யாதவ் சுழலில் வீழ்ந்தார்.
இதன்பிறகு, டெல்லிக்கு நெருக்கடி அதிகரித்தது. அக்ஷ்ர் படேல் 9 ரன்கள், ஷிம்ரோன் ஹெத்யமர் 15 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், ஷ்ரேயஸ் ஐயருக்கு பொறுப்பு அதிகரித்தது.
அவர் ஆட்டமிழக்கும்போது டெல்லி வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டன. அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஷ்ரேயஸுடன் இணைந்து சிறப்பான பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைப்பு தந்தார். குறிப்பாக ஆட்ட சூழலுக்கு ஏற்ப விக்கெட்டைப் பறிகொடுக்காமல் விளையாடினார் அஸ்வின்.
வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 6 ரன்களைத் தாண்டவிடாமல் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து விளையாடி அசத்தினார் ஷ்ரேயஸ்.
கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டன. கிருனால் பாண்டியா அந்த ஓவரை வீசினார், ஸ்டிரைக்கில் அஸ்வின் இருந்தார். அஸ்வின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து டெல்லியை வெற்றி பெறச் செய்தார்.
19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்த டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயஸ் 33 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அஸ்வின் 21 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார்