IPL Match47 - இமாலய இலக்கை எளிதில் 07 விக்கெட்களால் வென்ற ராஜஸ்தான் ராயல்
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டில் அபு தாபியில் இன்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ருதுராஜ் 42 பந்தில் அரைசதம் அடித்த நிலையில், 60 பந்தில் சதம் விளாசினார். அவர் கடைசி 18 பந்தில் 51 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா 15 பந்தில் 32 ரன்கள் எடுத்தும், ருதுராஜ் 101 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் டெவாட்டியா 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால், லீவிஸ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. லீவிஸ் 12 பந்தில் தலா 2 பவுண்டரி, சிக்சருன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவரில் 77 ரன்கள் குவித்தது.
மறுமுனையில் விளையாடிய ஜெய்ஸ்வால் 19 பந்தில் அரைசதம் அடித்ததுடன், 21 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் ஸ்கோரில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும்.
அடுத்து சஞ்சு சாம்சன் உடன் ஷிவம் டுபே ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாட, ஷிவம் டுபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 பந்தில் தனது முதல் ஐ.பி.எல். அரைசதத்தை பதிவு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 8.1 ஓவரில் 100 ரன்னையும், 12.4 ஓவரில் 150 ரன்னையும் கடந்தது.
அணியின் ஸ்கோர் 15.4 ஓவரில் 170 ரன்னாக இருக்கும்போது சஞ்சு சாம்சன் 24 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஷிவம் டுபே உடன் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலக்கை வெற்றிகரமாக எட்டியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது.
ஷிவம் டுபே 64 ரன்களுடனும், பிலிப்ஸ் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட் வீழ்த்தினார்