மயான அமைதியில் உறைந்த உலகம்

#Facebook #Twitter
Reha
3 years ago
மயான அமைதியில் உறைந்த உலகம்

நேற்று ஓரிரவு
ஃபேஸ்புக் இயங்கவில்லை
இன்ஸ்டாக்ராம் இயங்கவில்லை
வாட்ஸப் இயங்கவில்லை
நோடிபிகேஷன் சப்தங்கள் ஓய்ந்து
இந்த உலகம் மயான அமைதியில் ஆழ்ந்தது

ஓரிரவில் 
கோடிக்கணக்கான காதலர்கள்
தங்கள் காதலிகளை இழந்தனர்
கோடிக்கணக்கான காதலிகள்
தங்கள் காதலர்களை இழந்தனர்

தனிமையின் இருட்டில்
இன்பாக்ஸ் பச்சை விளக்கு மின்மினிகளை
மெளனமாக பின்தொடர்புகளுக்கு
நேற்றிரவு  கண்  தெரியவில்லை

தினமும் நூறு செஃபிக்களால்
தங்கள் நிழலை 
தாமே தொடரும் நார்சிஸ மான்கள்
தம் பாதைகளை இழந்தன

ஈரம் சொட்டும் காமத்தின் உரையாடல்கள்
சட்டென உலர்ந்து
நேற்றிரவு பாலைவனம் ஒன்று உருவானது

ஃபேஸ் புக் புரட்சியாளர்களும்
வாட்ஸப் வதந்தி பரப்புகிறவர்களும்
இன்ஸ்டாக்ராம் நடிப்பு தேவதைகளும்
ஓரிரவு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு
தற்காலிகமாக வீடு திரும்பினர்

நேற்று ஒரிரவு
எந்த ஒரு மனிதாபிமானக்  காட்சியோ
கோரக்கட்சியோ 
அரசியல் வெறியூட்டும் பிரகடனங்களோ
ட்ரெண்டிங்கில் வரவில்லை

ஒரு நடிகையின் விவாகரத்தைப்பற்றியோ
ஒரு சினிமாவின் திரைக்கதை நுணுக்கம் பற்றியோ
உக்கிரமான உரையாடல்கள்
தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன

பெண்கள் ஆண்கள் மீதும்
ஆண்கள் பெண்கள் மீதும் வைக்கும்
செல்லமான குற்றச் சாட்டுகள் ஏதுமின்றி
அவர்கள் அமைதியாகத் தூங்கினார்கள்

ஃபேக் ஐடிகள்
ஆடை மாற்றிகொண்டு
நைட்டியிலும் லுங்கியிலும்
நேற்றிரவு ஆசுவாசமாக இருந்தன

ஒருவர் இருப்பதை
இன்னொருவர் அறிந்துகொள்ளவும்
நேசித்த ஒருவர்
இப்போது யாருடன் இருக்கிறார் என்பதை
கண்காணிக்கவும் இருந்த
எல்லா வழிகளும் அடைபட்டு
எல்லோரும் எல்லோரிடமிருந்தும்
ஓரிரவு சுதந்திரம் அடைந்தனர்

மந்தையிலிருந்து பிரிந்த
ஒரு ஆடுபோல
அத்தனை ஆடுகளும் நேற்றிரவு முழுக்க
தன்னந்தனியே
மருகித் திரிந்தன

இறந்தவர்கள் யாருக்கும்
நேற்றிரவு கண்ணீர் அஞ்சலிகள் ஏதுமின்றி
அவர்கள் இறப்பு
கண்ணியமாக நடந்தேறியது

காண்பதற்கு வேறு எதுவும் இல்லாததால்
முன்னொரு யுகத்தில் நடந்ததுபோல
நாங்கள் எதிரிலிருக்கும் மனிதனின் 
முகத்தைக்கண்டோம்
ஆகாயத்திலிருக்கும் நட்சத்திரங்களை
நீண்ட நாளைக்குப்பிறகு பார்த்தோம்

வேறு சிலர்
இந்தக் கதவுகள் ஏன் திடீரென மூடிவிட்டன 
எனத்தெரியாமல்
இரவெல்லாம் சுவர்களில்
தலையை முட்டிக்கொண்டனர்

இதற்கெல்லாம் வெளியே
இன்னொரு கிரகத்தில்
கோடானுகோடி மக்கள் வாழ்கிறார்கள்
அவர்களுக்கு
நேற்றிரவு இந்த கிரகம்
அழிந்து மீண்ட தகவல்கூட தெரியாது

ஃபேஸ்புக்கில் தினமும்
உங்களை தற்கொலைக்குத் தூண்டும்
கவிதைகளை எழுதும் கவிஞன்
நேற்றிரவு தன் கவிதையை
ஒரு பாலத்தின் தூணின் மேல்
எழுதிச் சென்றான்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!