பாலியல் லஞ்சம் கேட்ட OICக்கு நடந்தது என்ன?
பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வனாத்தவில்லுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, வனாத்தவில்லுவ பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நலிந்த உபுல் பத்திரத்னவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அண்மையில் கைது செய்திருந்தது.
இந்த முறைப்பாடு இன்று (10) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இதன்படி சந்தேகநபர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காணி தகராறில் கணவனை பிரிந்து சட்டரீதியாக பிரிந்த பெண் ஒருவரிடம் 100,000 ரூபா மற்றும் பாலியல் இலஞ்சம் கோரியதாக வந்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்திருந்தது.