வெளியேற மறுத்தால் சட்ட நடவடிக்கை
மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற மறுப்பு தெரிவித்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் கடந்த 10 நாட்களில் பதுளை, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, கொழும்பு, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அனுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கேகாலை, குருநாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய 17 மாவட்டங்களில் உள்ள 126 பிரதேச செயலாளர் பிரிவுகள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டன.
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக பதிவாகியுள்ளன.
இந்த 126 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 17,481 குடும்பங்களில் 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அனர்த்தத்தினால் 18 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் 960 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.