கழிவுநீர் அகற்றும் திட்டம் கைவிடப்பட்டது
புத்தளம் அருவக்காடு குப்பை கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவு நீருடன் கலந்த வெள்ளநீரை சிறு கடலுக்குள் அனுப்பும் நடவடிக்கைகள், பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து நேற்று (10) கைவிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மரை காரணமாக புத்தளம் அறுவக்காடு குப்பைக் கிடங்கு மற்றும் கட்டிடங்கள் என்பன வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
சில கட்டிடங்கள் கூரையின் மட்டத்திற்கு வெள்ளத்தில் மூழ்கியதுடன் கழிவு நீர் சேகரித்து வைக்கப்படும் பாரிய தாங்கிகளும் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கழிவு நீருடன் கலந்த வெள்ளநீரை அருவக்காடு பகுதியிலுள்ள சிறுகடலுக்குள் அனுப்புவதற்காக நேற்று புதன்கிழமை பெக்கோ இயந்திரம் மூலம் பாரிய குழிகள் தோண்டப்பட்டு வந்துள்ளன.
இதனை அறிந்த கரைத்தீவு மற்றும் சேராக்குளி மக்கள் நேற்று (10) சம்பவ இடத்திற்கு சென்று , குறித்த திட்டத்திற்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
அத்துடன், இதுபற்றி வண்ணாத்தவில்லு பொலிஸாருக்கும், வண்ணாத்தவில்லு பிரதேச செயலாளருக்கும் முறைப்பாடும் செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் வருகை தந்த நிலையில் பொதுமக்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, அருவக்காடு குப்பை கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவு நீருடன் கலந்த வெள்ளநீரை சிறு கடலுக்குள் அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டதுடன், அதற்காக தோண்டப்பட்ட பாரிய குழிகளும் மூடப்பட்டுள்ளன.
கொழும்பு உள்ளிட்ட வெளிமாட்டங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை ரயில் மூலம் கொண்டுவந்து புத்தளம் அருவக்காடு பகுதியில் கொட்டுவதற்கு 2017 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
எனினும் இந்த திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு கோரி புத்தளத்தில் வாழும் மூவன மக்களும் பல மாதங்களாக ஆர்ப்பாட்டங்களையும், சத்தியக்கிரக போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
எனினும், புத்தளம் மக்களின் எதிர்ப்புக் கோஷங்களுக்கு மத்தியில், அரசாங்கம் அருவக்காடு, சேராக்குளி பகுதியில் திண்மக்கழிவு அகற்றும் திட்டத்தின் கீழ் நிர்மாணப்பணிகளைப் பூர்த்தி செய்து பணிகளையும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.