ஆஞ்சநேயர் வழிபாடும் ஹனுமனுக்குப் பிடித்த வழிபாட்டுப் பொருட்களும்..!

#spiritual #God
ஆஞ்சநேயர் வழிபாடும் ஹனுமனுக்குப் பிடித்த வழிபாட்டுப் பொருட்களும்..!

மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த கடவுள்களில் ஒருவர் ஆஞ்சநேயர். இந்து புராணங்களின்படி சிவபெருமான்தான் விஷ்ணுவிற்கு உதவுவதற்காக அவருடைய இராம அவதாரத்தில் ஆஞ்சநேயராக வந்ததாக உள்ளது. இராமாயணத்தில் ஆஞ்சநேயர் புரிந்த சாகசங்களும், இராமர் மீது அவர் கொண்டிருந்த பக்தியும், சீதை மீது அவர் கொண்டிருந்த மரியாதையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை.

கடவுள்களிலியே மிகவும் எளிதாக மனம் இறங்கக்கூடிய கடவுள்கள் ஆஞ்சநேயரும், விநாயகரும் தான். எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து வழிபட்டாலே ஆஞ்சநேயரின் அருளை பெற்றுவிடலாம். இங்கே ஆஞ்சநேயரின் சிறப்புகளையும், எந்த பொருட்களை கொண்டு வழிபட்டால் அவரின் அருளையும் பெறலாம் என்பதை பார்க்கலாம்.

ஆஞ்சநேயர் ஆஞ்சநேயர் தேவ கன்னிகை அஞ்சனைக்கும் வானர மகாராஜா கேசரிக்கும் பிறந்தவராவார். அஞ்சனை சிவபெருமானே தனக்கு மகனாக பிறக்க வேண்டுமென்று தவமிருந்தார், ஈசனும் அந்த வரத்தை வழங்க பிரம்மதேவர் அஞ்சனையை பெண்ணாக பூமிக்கு அனுப்பி வைத்தார். பின்னர்தான் ஈசனே அவர்களுக்கு மகனாக பிறந்து பின்னாளில் இராமபிரானுடன் இணைந்து இராவண வதத்தில் பங்கு கொண்டார்.

அனுமன் இராமாயணம் வால்மீகி இராமாயணம் இயற்றுவதற்கு முன்னரே ஆஞ்சநேயர் ஒரு இராமாயணத்தை இயற்றியதாக கூறப்படுகிறது. இதுவே அனுமன் இராமாயணம் எனவும் அழைக்கப்படுகிறது. இராமயணபோரின் வெற்றிக்கு பிறகு இராமபிரானுடன் அயோத்திக்கு சென்ற ஆஞ்சநேயர் அங்கேயே தங்கி இராமனுக்கு பணிவிடைகள் செய்து வந்தார்.

இராமர் இறந்து வைகுண்டம் சென்றபின் இமயமலையை நோக்கி சென்ற ஆஞ்சநேயர் அங்கே இராமருடைய பெயரை சொல்லி தியானம் செய்துகொண்டே இருந்தார். அப்போது அவர் தன் நகங்களால் குகையின் சுவர்களில் இராமாயண கதையை எழுதியதாகவும் அதுவே அனுமன் இராமாயணம் எனவும் நம்பப்படுகிறது.

ஆஞ்சநேயரை எல்லாக் கிழமைகளிலும் வணங்கலாம். ஆனால் செவ்வாய் கிழமையும், சனி கிழமையும் ஆஞ்சநேயரை வணங்குவது கூடுதல் சிறப்பு. அந்த நாட்களில் அவருக்கு பிடித்த பொருட்களை கொண்டு வழிபட்டால் அவரின் அனுக்கிரஹம் எளிதில் கிடைக்கும்.