பக்தர்கள் மனதார அவரை நினைத்தாலே போதும் அவர்களைத் தேடி ஓடிவருவார்..!

#spiritual #Holy sprit
பக்தர்கள் மனதார அவரை நினைத்தாலே போதும் அவர்களைத் தேடி ஓடிவருவார்..!

ஸ்ரீசாயிநாதரை தரிசிக்கச் செல்லும் போது, மனம் கனிந்த பக்தியுடன் தான் செல்ல வேண்டும். அப்போதுதான் ஸ்ரீசாயிநாதரின் பூரண அருளாசி நமக்குப் பிரசாதமாகக் கிடைக்கப் பெறும். நேரம், காலம் என்று எதுவும் கிடையாது அவருக்கு. தன் பக்தர்கள் மனதார அவரை நினைத்தாலே போதும், அவர்களைத் தேடி ஓடிவருவார்.

பல சந்தர்ப்பங்களில் அவர் மறைபொருளாகவும், குறியீடாகவும் தட்சணை கேட்பதுண்டு. தன் பக்தர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும் உண்மையான நம்பிக்கையுடனும், பக்தியுடனும் தன்னை அழைத்தால் ஏதோவொரு ரூபத்தில் சென்று சாயிநாதர் அவர்களுக்கு நிச்சயம் அருள் புரிவார்.

பாபா கேட்டது பணம் அல்ல, அடியவர்களுக்கு தானம், தர்மத்தைப் பற்றிப் புரிய வைக்கவும், பணத்தின் மீது உள்ள பற்று குறைவதற்கும், அவர்கள் மனம் தூய்மை அடைவதற்கும் பாபா தட்சணையைக் கட்டாயமாகக் கேட்டுப் பெற்றார். பாபா, தான் பெற்ற தட்சணையைப் பல மடங்காகத் திருப்பிக் கொடுப்பது என்ற ஒரு விசித்திரமான நியதியைக் கொண்டிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட நாளில் கிடைத்த தட்சணை ரூபாய் இருபத்தைந்து என்றால், அன்று அவர் விநியோகம் செய்தது ரூபாய் முந்நூறுக்கு மேல் இருக்கும். நாள்தோறும் பாபாவிடம் தானம் பெற மசூதிக்கு இரவு 8 மணியளவில் ஒரு பெரிய கூட்டமே வருவது வழக்கம். வந்தவர் அனைவருக்கும் அவரவர்களின் தேவைக்கேற்ப பாபா மிகச்சரியான தொகையை எப்படி அளித்தார் என்பது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத அதிசயமாகும்.

இந்த உலகப் பொருள்கள், புகழ், கௌரவம், ஆதாயம் ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றை விலக்க வேண்டும். இவை கூடவே கூடாது என்று பொருள் அல்ல. பணம், புகழ், கௌரவம், ஆதாயம் ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டு அவற்றுக்காகவே உழைக்கக் கூடாது. அவற்றுக்காக ஏங்கக் கூடாது. மனிதன் வெளியில் நடப்பவற்றையே எப்போதும் பார்க்கிறான். அதை விடுத்து உட்புறமாகப் பார்க்க வேண்டும். புலன் இன்பம் தருபவை ப்ரியாக்கள். ஆன்மிக வளர்ச்சி தருபவை ச்ரியாக்கள். பேராசை, அதிகப்பற்று போன்றவை புலன் இன்பத்துக்கே வழி வகுக்கும். அவற்றை விலக்கி தியானம், கோயில், தெய்வம் போன்றவற்றில் மனதை ஈடுபடுத்த வேண்டும்.