இலங்கையை கல்விக் கேந்திர மையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை!

Mayoorikka
2 years ago
இலங்கையை கல்விக் கேந்திர மையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை!

இலங்கையை பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக மாற்றுவதற்கு உதவுவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி கெரன் அன்ட்ரூஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்புகளைப் படிக்க விரும்பும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பொருத்தமான பாடநெறிகளின் ஆரம்ப கட்டத்தை இலங்கையில் தொடர்வதற்குத் தேவையான கல்வி நிறுவனங்களை இலங்கையில் நிறுவுவதன் மூலம் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக அன்ட்ரூஸ் சுட்டிக்காட்டினார்.
 
திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 12 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ஆகும்.

இலங்கையில் தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய உற்பத்திகளை இலங்கைக்கு கொண்டுவந்து பெறுமதி சேர்த்து, மீள் ஏற்றுமதி செய்வதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக கெரன் அன்ட்ரூஸ் தெரிவித்தார்.

பசுமை விவசாயம் தொடர்பான இலங்கையின் கொள்கையைப் பாராட்டிய அமைச்சர், அவுஸ்திரேலியாவும் நிலைபேறான விவசாயத்தில் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார்.

 இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2022ஆம் ஆண்டில், 75 வருடங்கள் நிறைவடைகின்றன. அந்த நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கைகளை அன்ட்ரூஸ் பாராட்டினார்.

11.7 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் உதவியை இலங்கையில் கொவிட் தடுப்புச் செயல்முறைக்கு வழங்கியதை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.