சொகுசு காரில் 13 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேகத்தில் ஒருவர் கைது

Reha
2 years ago
சொகுசு காரில் 13 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேகத்தில் ஒருவர் கைது

சொகுசு காரில் 13 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேகத்தில் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை விசேட அதிரடிப்படை மற்றும் அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் கூட்டு நடவடிக்கையில் இன்று (21) இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துவில் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துசாலையின் முன்பாக வைத்தே குறித்த சொகுசு காரில் ஐஸ் போதைப்பொருளுடன் பயணம் செய்த நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இச்சோதனை நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளீன் பெரேரா மற்றும் மாவட்ட கட்டளை அதிகாரி டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் ஜி.எஸ்.பி.பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் புலனாய்வு பிரிவினர் இணைந்தே இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த நபரிடமிருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்வதாக புலனாய்வு அதிகாரிகள் அழைப்பை ஏற்படுத்திய பின்னர் அவ்விடத்தில் மாறுவேடத்தில் சென்ற விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயன்படுத்திய அதி சொகுசு கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னர், கைது செய்யப்பட்ட நபர் கார் உள்ளிட்ட போதை பொருள் யாவும் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.