கடலுக்குள் செல்லும் கிராமம்: அவதிப்படும் மக்கள்

Mayoorikka
2 years ago
கடலுக்குள் செல்லும் கிராமம்: அவதிப்படும் மக்கள்

அண்மைக்காலமாக புத்தளம் உடப்பு பிரதேசத்தில் கடலரிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளதால் அப் பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

இதனால், இங்குள்ள பல மீன் வாடிகள், வீடுகள் அழிவடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளும் கடுமையாக சேமடைந்து காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், மீனவர்கள் தங்களின் படகுகளை கரையோரங்களில் நிறுத்தி வைக்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது.

உடப்பு கிராமத்தில் வாழும் மக்கள் மீன்பிடித் தொழிலை ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வரும் நிலையில், இவ்வாறு கடலரிப்பால் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

அண்மைக்காலமாக உடப்பு பிரதேசத்தில் கடலரிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளதால், அதனைத் தடுக்கும் தற்காலிக நடவடிக்கையாக கரையோரைப் பகுதிகளில் மணல் நிரப்பப்பட்ட மூடைகள் அடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், கடலரிப்பை தடுப்பதற்காக கருங்கற்கள் இடப்பட்டுள்ள போதிலும், கடலரிப்பின் தீவிரம் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த வெள்ள நீரை கடலுக்குள் அனுப்பும் நோக்கில் உடப்பையும் ஆண்டிமுனையையும் இணைக்கும் முகத்துவாரம் பாலத்திற்கு கீழாக வெட்டப்பட்டமையே இந்த பகுதி இவ்வாறு கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, கடலரிப்பினால் உடப்புக் கிராமம் முழுமையாக அழிவடையும் முன்னர் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.