இலங்கையில் நத்தார் தினம் அமைதியாக கொண்டாடப்பட்டது.

#SriLanka #Prime Minister
இலங்கையில் நத்தார் தினம் அமைதியாக கொண்டாடப்பட்டது.

இலங்கையில் வாழும் கிறிஸ்தவ மக்கள் நேற்றிரவு தொடக்கம் அமைதியாக நத்தார் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

நத்தார் பண்டிகையானது இயேசு கிறித்துவின் பிறப்பைக் கொண்டாடும்  வண்ணமாக ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிறது.

உலகின் முதலாவது நத்தார் தின கொண்டாட்டம் நியூஸிலாந்தின் ஒக்லேண்ட் நகரில் ஆரம்பமானது.

இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 4.30க்கு அங்கு நத்தார் தினம் மலர்ந்துள்ளது.

இதேநேரம், வத்திக்கானின் புனித பேதுரு பேராலயத்தில் பாப்பரசர் ப்ரான்ஸிஸ் தலைமையில் பிரதான நத்தார் தின ஆராதனை இடம்பெற்றது.

இதேவேளை, இலங்கையில் பிரதான நத்தார் தின ஆராதனை, நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயாத்தில் கத்தோலிக்க போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றது.

அத்துடன், நாட்டின் வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என பல்வேறு பாகங்களிலும் உள்ள தேவாலயங்களில் நத்தார் தின ஆராதனைகள் இடம்பெற்றன.

இயேசு கிறிஸ்து பிறப்பு விழா ஒரு மகிழ்ச்சிகரமான விழாவாக உள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவிததுள்ளார்.

நத்தார் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
நத்தார் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தூய உள்ளங்களைக் கொண்ட ஒரு சமூகமே தமது எதிர்பார்பபு என தெரிவித்துள்ளார்.
 
அவ்வாறான சமூகமொன்றை உருவாக்குவதே ஆண்டவரின் ஆசிர்வாதமும் விருப்பமும் என்பதில் நாம் நம்பிக்கை கொள்வோம்.
 
இறை ஆசிர்வாதம் பெற்ற வணக்க ஸ்தலங்களில் அண்மையில் நேர்ந்த துன்பியல் சம்பவங்கள் மீண்டும் ஓருமுறை இடம்பெறாதிருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
 
பிறந்துள்ள இந்த நத்தாரை அச்சமும் சந்தேகமுமின்றி நிம்மதியாக கொண்டாடுவதற்கான சூழல் தற்போது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
 
சகல மக்களையும் சமமாக மதித்து போற்றும் உயரிய சமூகமொன்றை உருவாக்குவதற்காக இந்த உன்னத நத்தார் தினத்தில் நாம் அனைவரும் மீண்டும் வாக்குறுதி அளிப்போம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, ஏனையோரின் மத சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளாத மதத் தீவிரவாதிகள் குழுவொன்றுக்கு, இலங்கை கிறிஸ்தவ சமூகத்தினர் கடந்த ஏப்ரல் 21 அன்று பலியாகியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
நத்தார் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
குண்டுத் தாக்குதல்கள் காரணமாக, இந்த முறை முன்னர் இல்லாத வகையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் நத்தார் வழிபாடுகளை நடாத்த வேண்டி ஏற்பட்டுள்ளது
 
மதம் மற்றும் இனத்தினை அடிப்படையாகக் கொண்ட குறுகிய அரசியல் காரணமாக எமது தாய் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள வருந்தத்தக்க செயல் இதன் மூலம் வெளிப்படுகிறது.
 
எனினும், மதத் தீவிரவாதம் எனப்படும் இருளை அகற்றி, எமது தாய்நாட்டிற்கு பாதுகாப்பினையும், சமாதானத்தையும் மீண்டும் வழங்க இலங்கையின் புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.