ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுத்த பேராயர் டெஸ்மன்ட்டுட்டு காலமானார்!

Mayoorikka
2 years ago
ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுத்த பேராயர் டெஸ்மன்ட்டுட்டு காலமானார்!

ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வந்தவரும், உலகெங்கும் மனித உரிமைகளை வலியுறுத்தியும் நிறவெறிக்கு எதிராகவும் போராடி வந்தவருமான நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்காவின் அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர் டெஸ்மன்ட்டுட்டு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

இலங்கை அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்திய போரை நிறுத்தி மனித உரிமை மீறல்களுக்குப்
பொறுப்பு கூறவேண்டும் என டெஸ்மன்ட் டுட்டு வலிறுத்தி வந்தார்.

தனது இறுதிக் காலம் வரை ஒடுக்கப்பட்ட இனங்களுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்தார். இந்நிலையில் கேப்டவுன் நகரில் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை
அதிகாலை காலமானார். அவரது மறைவால், நிறவெறியிலிருந்து தென்னாபிரிக்காவை விடுவித்த மேலும் ஒருவரை நாம் இழந்துள்ளோம் என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ராமபோசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

டெஸ்மண்ட் டுட்டு யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு தேச பக்தர். உழைக்காமல் கடவுளை மட்டும் நம்புவதால் எந்தப் பலனும் இல்லை என்ற பைபிள் கோட்பாட்டை தனது வாழ்வால் நிரூபித்தவர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 90 வயதான டெஸ்மண்ட் டுட்டு, நோபல் பரிசு பெற்று உயிரோடு இருந்த கடைசி தென்னாபிரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. ஜோஹன்னஸ்பர்க் மற்றும் கேப் டவுன் நகர தேவாலயங்களில் முதல் கருப்பின தலைமைப் பாதிரியாராக பொறுப்பு வகித்த அவர், தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகவும் மனித உரிமைகளை வலியுறுத்தியும் செயல்பட்டு வந்தார்.

அதன் காரணமாக, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு உட்பட பல்வேறு சர்வதேச விருதுகள் வழங்கப்
பட்டன. தென்னாபிரிக்காவில் நிற வெறி ஒழிக்கப்பட்டதில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளதாகப் பாராட்டப்படுகிறது. 

அவரது மறைவுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.