முடிவுக்கு வந்தது புகையிரத வேலைநிறுத்தம்

#Protest
Prathees
2 years ago
 முடிவுக்கு வந்தது புகையிரத வேலைநிறுத்தம்

போக்குவரத்து இராஜாங்க அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவர புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

25 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்ததாக சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்தார்.

இதன்படி, நாளை (29) முதல் வழமையான கடமைகளில் ஈடுபடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ரயில் டிக்கெட் விநியோகம் நாளை தொடங்கும், ஆனால் நாளை முதல் அனைத்து ரயில்களும் இயங்காது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக எரிபொருள், சீமெந்து மற்றும் கோதுமை மாவின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தால் நாளொன்றுக்கு 4 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புகையிரத சாரதிகளின் மேலதிக நேரத்தை கணக்கீடு செய்தல், பதவி உயர்வுக்கு பதிலாக காப்பு கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 24ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனால் ரயில் டிக்கெட் வழங்குதல், பார்சல்களை ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட பல சேவைகள் செயல்படாததால், பயணிகள் டிக்கெட் இன்றி ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.