தனியார் பாதுகாப்புத்துறை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறையாகும்-கமல் குணரத்ன

Prabha Praneetha
2 years ago
தனியார் பாதுகாப்புத்துறை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறையாகும்-கமல் குணரத்ன

தனியார் பாதுகாப்புத் தொழிற்துறை, வளர்ந்து வரும் ஒரு துறையாகும், தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதால் இவர்களினால் நாட்டிற்கு வழங்கப்படும் சேவை அளப்பரியது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

“பொருளாதாரத்திற்கு பங்களிப்பது மற்றும் நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்பன தவிர மிக முக்கியமாக, இலங்கை படைத்தரப்பில் சேவையாற்றிய வீரர்ககளைக் கொண்டு தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிக பங்களிப்பை வழங்கி வருகின்றன என்று மேலும் தெரிவித்தார்.

இலங்கை பாதுகாப்பு சேவை வழங்குநர்கள் சங்கத்தின் 2021ம் ஆண்டிற்கான ´வருடாந்த பொதுக் கூட்டம் கொழும்பு தாஜ் சமுத்திர ஹோட்டலில் நேற்றையதினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பானது தனக்குறியது என சுட்டிக்காட்டிய அவர், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 150,000 ற்கு மேற்பட்ட உறுப்பினர்களும் தேசிய பாதுகாப்பு இயந்திரத்தில் ஒருங்கிணைந்த பங்குதாரர்களாக மாறியுள்ளதை தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக குறிப்பிட்ட அவர், தேசிய பாதுகாப்பினது பெறுபேறுகள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்தாலும் அதற்கு பாதுகாப்பு செயலாளர் என்றவகையில் தானே பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்பு தொடர்பான கட்டளை, அதிகாரம், பொறுப்பு என்பன தனது தோளிலேயே சுமத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர், கொவிட்-19 தொற்று காரணமாக தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாடு முழுவதும் வளர்ச்சியைக் காட்டும் தொழில்துறையாக இத்துறை மாறிவருவதை அவர் சுட்டிக்காட்டினர்.

பல நோக்கு செயற்பாடுகள் பற்றிய போதுமான அறிவு மற்றும் பாதுகாப்பு சார் செயல்பாடுகளை கையாளும் தொழில்நுட்பம் உள்ளிட்ட இந்தத்தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேவைகள் குறித்து விளக்கமளித்த பாதுகாப்பு செயலாளர், பொறுப்புகளை ஏற்கத் தயாராகும் மனித மூலதன முதலீட்டில் அறிவு, திறன் அபிவிருத்தி என்பன மிக முக்கியமான காரணிகளாக அமையும் என தெரிவித்தார்.