யாழ்ப்பாணத்திற்கு வரும் மற்றுமொரு ஆபத்து: சுகாதார பணிப்பாளர் விடுத்த எச்சரிக்கை

Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்திற்கு வரும் மற்றுமொரு ஆபத்து: சுகாதார பணிப்பாளர் விடுத்த எச்சரிக்கை

இலங்கையை மலேரியா அற்ற நாடாக தொடர்ந்தும் பேணுவதற்கான முற்காப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையிலதெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

இலங்கை 2016ஆம் ஆண்டு முதல் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மலேரியாத் தொற்று பரவவில்லை. 

எனினும் கடந்த ஆண்டுகளில் மலேரியா பரம்பல் அதிகமாக காணப்படும் இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகள் போன்ற வேறு நாடுகளில் இருந்துவரும் பயணிகளில் மலேரியாத்தொற்றுடன் பலர் இனங்காணப்பட்டுள்ளனர். இது மலேரியா அற்ற நாடாக எமது நாட்டை பேணுவதில் நாம் எதிர் நோக்கும் மிகப் பெரிய சவாலாகும்.

கடந்த சிலவாரங்களில் மலேரியா தொற்றுடன் இருவர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மலேரியா பரம்பல் அதிகமாக காணப்படும் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களாவர். மலேரியாவை பரப்பும் அனோபிலிஸ் வகை நுளம்புகள் பெருமளவாக எமது பிரதேசத்தில் காணப்படுகின்றன. மேலும் அண்மைக்காலங்களாக நகர்ப்புற மலேரியாவை பரப்பக் கூடிய அனோபிலிஸ் ஸ்டெபென்சி வகை நுளம்புகளும் எமது பிரேதேசங்களில் காணப்படுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையானது மலேரியா நோயை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம் வகை ஒட்டுண்ணிகளை மனித உடலிலிருந்தும் அதை காவிப்பரப்பும் நுளம்புகளில் இருநதும் ஒழித்ததன் மூலமே மலேரியா அற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

எனவே காவிகள் பெருமளவாக காணப்படும் எமது பிரதேசத்தில் மலேரியா நோய்க்கான ஒட்டுண்ணியுடன் ஒருவர் இருந்தாலே அவ் இடத்தில் மலேரியா மீண்டும் விரைவாக பரவும் அபாயம் உள்ளது. எனவே மலேரியா நோய் அதிகம் காணப்படுகின்ற நாடுகளுக்கு செல்பவர்கள் முற்காப்பாக தடுப்பு மருந்துகளை ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே உரிய முறையில் உள்ளெடுப்பதன் மூலம் தமக்கு மலேரியா தொற்று ஏற்படுவதை தடுக்கலாம்.

ஆபிரிக்க நாடுகள் மற்றும் இந்தியா செல்ல இருப்பவர்கள் மலேரியா நோயில் இருந்து தம்மை காத்துக்கொள்வதற்காக தமது பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்வதன் மூலம்,அருகில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையிலோ அல்லது சுகாதார கிராமம், பண்ணையில் அமைந்துள்ள பிராந்திய மலேரியா தடை இயக்க பணிமனையிலோ (தொ.பே.இல 021- 2227924) தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இவர்கள் மலேரியா பரம்பல் அதிகமாக காணப்படும்

நாடுகளில் தங்கி இருக்கும் காலப்பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் தடுப்பு மருந்துகளை தொடர்ந்து உள்ளெடுப்பதோடு பயணம் நிறைவுற்று நாடு திரும்பிய பின்பும் நான்கு வாரங்கள் நிறைவுறும்வரை வாரத்திற்கு ஒருமுறை தடுப்பு மருந்துகளை தொடர்ந்து எடுக்கவேண்டும். என்றுள்ளது.

மேலும் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்