பாதுகாப்பான மற்றும் வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் இன்று பாடுபடுகின்றோம்- பிரதமர்

Prabha Praneetha
2 years ago
பாதுகாப்பான மற்றும் வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் இன்று பாடுபடுகின்றோம்- பிரதமர்

சவால்களுக்கு மத்தியிலும் உங்களுக்காக பாதுகாப்பான மற்றும் வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் இன்று பாடுபடுகின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை நேற்று (06) மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மலியதேவ மகளிர் கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாம் மற்றும் மாணவிகள் பிரதமர் உள்ளிட்ட விருந்தினர்களை வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து கட்டிட திறப்பு விழாவை குறிக்கும் வகையில் அதற்கான நினைவு பலகை பிரதமரினால் திறந்துவைக்கப்பட்டது.

புதிய கட்டிடத்தை கண்காணித்த பிரதமர், அதன் வகுப்பறையொன்றை திறந்து வைத்தார்.

மலியதேவ மகளிர் கல்லூரியின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு 25 ரூபாய் பெறுமதியான நினைவு முத்திரையொன்றும் முதல் நாள் உறையும் பிரதமரின் தலைமையில் வெளியிடப்பட்டது.

தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அவர்களினால் விசேட நினைவு முத்திரை பிரதமருக்கு வழங்கப்பட்டது.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகியமையை சுட்டிக்காட்டிய பிரதமர், தொழில்நுட்பம் நன்மை தருவதை போன்றே தீமையை ஏற்படுத்தும் என்பதால் சரியானதை தெரிவு செய்ய பிள்ளைகள் அறிந்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் குறித்து பெற்றோர் போன்றே ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மலியதேவ மகளிர் கல்லூரியின் ஊடகப் பிரிவு மாணவியரை சந்தித்த பிரதமர், ´உங்களுக்கு உள்ள குறைப்பாடுகள் என்ன´ என்று மாணவிகளிடம் வினவினார். ´

எமக்கு கெமரா இல்லை´ என மாணவிகள் குறிப்பிட்ட நிலையில் அவர்களின் தேவையை நிறைவேற்றுமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களிடம் அச்சந்தர்ப்பத்திலேயே பணிப்புரை விடுத்தார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்