கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது.. அதிரடி உத்தரவு போட்ட ஆசிய நாடு

Keerthi
2 years ago
கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது.. அதிரடி உத்தரவு போட்ட ஆசிய நாடு

உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பாடாய்படுத்தி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை ஓமிக்ரான் பல நாடுகளிலும் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றம் அதிர்ச்சி அளிக்ககூடிய தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஓமிக்ரான் டெல்டா வைரஸை விட வீரியம்மிக்கது என்றும் கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் என்று பாரபட்சம் பார்க்காமல் ஓமிக்ரான் வைரஸ் தொடர்ந்து மிரட்டி வருகிறது. ஆசிய நாடான பிலிப்பைன்சையும் ஓமிக்ரான் விட்டு வைக்கவில்லை. ஓமிக்ரான் காரணமாக பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26,458 பாதிப்பு கண்டறியப்பட்டன.

மொத்தம் 2,936,875 பாதிப்புகள் பதிவாகி உள்ளன. 52,135 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக மிக அதிகமான பாதிப்புகள் மற்றும் இறப்புகள் பிலிப்பைன்சில் நிகழ்ந்துள்ளன. இப்படி கொரோனா ஜெட் வேகத்தில் பரவும் நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், ' நாட்டில் நோய்த்தொற்றுகள் மூன்று மாத உயர்வை எட்டியுள்ளன. தடுப்பூசி போடாதவர்கள் வீட்டில் இருக்காமல் வெளியே வந்தால் கைது செயப்படுவார்கள். தடுப்பூசி போடப்படாதவர்களைத் தேடி, அவர்கள் வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்' என்று அவர் கூறினார்.

'ஒவ்வொரு பிலிப்பைன்ஸ் மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு நான்தான் பொறுப்பு. எனவே எனது இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்தார். பிலிப்பைன்சில் 1.3 கோடி மக்கள் தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தடுப்பூசி போடப்படாத மக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே தங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியும் எனபது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்