- தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -26

#history #Article #Tamil People
 - தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -26

நேற்றைய தொடர்ச்சி...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

நாலடியார்

நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாவால் இயற்றப் பட்டதால் நாலடியார் எனப்பட்டது. இந்நூல் சமண முனிவர் நானூறு பேரால் பாடப்பட்டது. திருக்குறளைப் போலவே நாலடியாரும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்று பகுப்பாக உள்ளது.

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.

இனியவை நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு

பூதஞ்சேந்தனார் இயற்றியது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நானகு பாடல்களில் இன்பம் தருவன நான்கினைக் கூறியுள்ளார். மற்ற பாடல்களில் மூன்று மூன்று இன்பங்களை கூறியுள்ளார்.

திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு

திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருளை குறிக்கும். மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைப் போன்று, இந்நூற் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப் பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம். இதனாலேயே இந்நூல் திரிகடுகம் எனப் பெயர் பெற்றது. இதன் ஆசிரியர் நல்லாதனார்.

ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு

ஆசாரக்கோவை என்பதற்கு 'ஆசாரங்களினது கோவை' என்றோ, 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ பொருள் கூறலாம். இதன் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்.

சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்தரி வேர் என்பனவாம். சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல் நலம் பேணுமாறு போல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறித்த ஐந்தைந்து பொருள்களும் உயிர் நலம் பேணுவன. அதனால் இந்நூல் சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர்.

முதுமொழிக் காஞ்சி - பதினெண் கீழ்க்கணக்கு

மதுரைக் கூடலூர் கிழார் என்பவரால் பாடப்பெற்றது. பத்து அதிகாரங்களையும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து பத்து குறட்டழிசைகளையும் கொண்டது.அறம், பொருள், இன்பம் பற்றிக் கூறுவது.

பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

இந் நூலிலுள்ள பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்து, அதற்கு விளக்கம் கூறும் வகையில் ஆசிரியர் பாடியிருத்தலின், பழமொழி என்னும் சிறப்புப்பெயர் பெற்றது. மேலும் இந்நூல் நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இதனால் பழமொழி நானூறு" என்றும் இது குறிக்கப் பெறும். இதன் ஆசிரியர் மூன்றுறை அரையனார்.

தொடரும்...

மேலதிக தமிழர் வரலாறும் தொன்மையும் பாகங்களைப் பார்வையிட Click Here