தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 27
நேற்றைய தொடர்ச்சி...
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு
ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் 'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர். ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையாக அற நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை நீர் மையால் இப் பெயரைப் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.
திருக்குறள்
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். உலக இலக்கிய அரங்கில் தமிழனின் பெருமையை நிலைநாட்டும் உயர்வுடையது இந் நூல். இது ஏழு சீர்களைக் கொண்ட 'குறள்' என்னும் யாப்பில் அமைந்தது. 'உலகப் பொதுமறை' என அழைக்கப்படுகிறது. 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது. இதில் கொடுக்கப்பட்டுள்ள உரை திரு. மு.வரதராசனார் அவர்களால் எழுதப்பட்டதாகும்.
கார் நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு
நாற்பது செய்யுட்களை உடைமையாலும், கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும் இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது.இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.
ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது. இந் நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார்.
திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் உள்ளன. அதனால் இந்நூல் திணைமொழி ஐம்பது என ஐந்திணை ஐம்பதிலிருந்து வேறுபட்டு பெயர் பெற்றுள்ளது. இந் நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார்.
ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு
ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந் நூல் அமைந்துள்ளதால், ஐந்திணை எழுபது என பெயர் பெற்றது.இந் நூலை அருளியவர் மூவாதியார்.
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையால் 'திணைமாலை' என்றும், பாடல் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும், இந்நூல் பெயர் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியார்.
கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு
கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றிக் குறிப்பிடுவதால் கைந்நிலை எனப்பட்டது. இந் நூலைச் இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார்.
களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு
களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும்.களவழி நாற்பது பாடியவர் பொய்கையார் என்பவராவர்
இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு
இது நான்கு பகுதிகளைக் கொண்டது. இந் நூலைச் செய்தவர் பொய்கையார்.
தொடரும்....
மேலதிக தமிழர் வரலாறும் தொன்மையும் பாகங்களைப் பார்வையிட Click Here