இந்திய மீனவர்களின் படகுகளை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை

Prabha Praneetha
2 years ago
இந்திய மீனவர்களின் படகுகளை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை

இலங்கை கடற்பரப்பிற்குள் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் 105 படகுகளை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான கடிதம் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் திணைக்களத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

படகுகள் தற்போது காணப்படுகின்ற கடற்படை தளங்களிலேயே பகிரங்க ஏலம் நடத்தப்படவுள்ளது.

இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 65 படகுகள் காரைநகரிலும் 05 படகுகள் காங்கேசன்துறையிலும் கிளிநொச்சி – கிராஞ்சியில் 24 படகுகளும் தலைமன்னாரில் 09 படகுகளும் கற்பிட்டியில் 02 படகுகளும் உள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்திய மீனவர்களின் படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.

வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை மதிப்பீடு செய்வதற்கான குழு நாளை  தமது மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (22) அறிவித்திருந்தார்.