வர்த்தமானிக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

Prathees
2 years ago
வர்த்தமானிக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட "தீவிரவாத மற்றும் மதக் கோட்பாடுகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான விதிமுறைகள்" அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்ட மூன்று தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் மனு மீதான விசாரணையை மார்ச் 21ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

வன்முறை மற்றும் தீவிரவாத மத சித்தாந்தங்களை தடுக்கும் நோக்கில் 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் 2021 மார்ச் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டதாக மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த விதிமுறைகளின் கீழ், எந்தவொரு நபரையும் எந்தவித நீதி நடவடிக்கைகளும் இன்றி கைது செய்து புனர்வாழ்வளிக்க முடியும் என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் எனவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.