இன்றைய வேத வசனம் 30.01.2021

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 30.01.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

ஒரு சனிக்கிழமை மாலை ஒரு ஆலயத்தில் பிரசங்கம் செய்து முடித்தபோது ஒரு சகோதரர் என்னிடம் வந்தார்.

சகோதரரே, நாளை நீங்கள் மத்திய சிறைச்சாலைக்கு சென்று அவர்களுக்கு பிரசங்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நானும் சந்தோஷத்தோடு சம்மதித்தேன்.

அந்தச் சிறைச்சாலையில் எல்லோரும் கூடி வருவதற்கு வசதி எதுவும் கிடையாது. நான் நீண்ட வராந்தாவில் ஒரு ஓரத்தில் நின்று பிரசங்கம் செய்ய வேண்டியிருந்தது.

எனக்கு முன்னால் வராந்தாவின் இரண்டு பக்கங்களிலும் இருந்த அறைகளில் கம்பிகளுக்குப் பின்னால் 200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

எனது வாழ்க்கையில் முதல்முறையாக சுவற்றைப் பார்த்து நான் பிரசங்கம் செய்தேன். தேவ கிருபையினால் நான் அதைச் சரியாகச் செய்து முடிக்க முடிந்தது!

பிரசங்கம் முடிந்த பிறகு என்னுடைய பிரசங்கத்தை கேட்டவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பார்க்கும்படி ஒவ்வொரு அறைக்கும் முன்னால் சென்றேன்.

முதல் அறையில் இருந்தவர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததை கண்ட நான் அதிர்ச்சி அடைந்தேன். கண்டிப்பாக அவர்கள் என் பேச்சைக் கேட்டிருக்க முடியாது!

ஏன் இங்கே அடைக்கப்பட்டிருக்கிறீர்கள்? என்று நான் கேட்டேன். பொய் சாட்சியின் காரணமாக நாங்கள் இங்கே அடைக்கப்பட்டிருக்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள்.

நான் அடுத்த அறைக்கு முன்பாக சென்றேன். அங்கிருந்தவர், குற்றத்தை செய்தவன் என்னைப்போல இருந்தபடியால் என்னைப் பிடித்து அடைத்து விட்டார்கள் என்று கூறினார்.

அடுத்த அறையிலிருந்தவர், குற்றத்தை செய்தவன் தப்பி விட்டான் அவன் கூட இருந்தபடியால் என்னை பிடித்துவிட்டார்கள் என்று கூறினார். அங்கு அடைக்கப்பட்டிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக சொன்னார்கள்.

கிட்டத்தட்ட சிறைச்சாலையின் அனைத்து அறைகளையும் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு அறையிலிருந்து அழுகைக் குரல் கேட்டது நான் எட்டிப்பார்த்தேன்.

அங்கே ஒருவர் முழங்காலில் நின்றபடியே தனது முகத்தை கைகளால் மூடிக் கொண்டு அழுது கொண்டிருந்தார்.

என்ன சகோதரரே என்ன நடந்தது? என்று நான் கேட்டேன்!

அதற்கு அவர், எனது பாவங்களை என்னால் தாங்க முடியவில்லை என்று கதறினார். கடைசியாக அப்படிப்பட்ட ஒருவரை பார்த்ததற்காக நான் தேவனைத் துதித்தேன்.

அவர் என்னையே உற்றுப் பார்த்தார் நீதானே இப்போது பிரசங்கம் செய்தவன்? என்று அவர் கேட்டார்.
ஆமாம் என்று சொன்னேன், உங்களுடைய பாவங்கள் தாங்க முடியாத அளவுக்கு பாரமாக இருக்குமானால், அவைகளை உங்களுக்காகச் சுமக்கக்கூடிய ஒருவரிடம் அவைகளை ஒப்புக் கொடுத்து விட்டால் என்ன? என்று அன்போடு கேட்டேன்!

யார் அவர்? என்று கேட்டார் அந்தக் கைதி!
அவர்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்று நான் பதிலளித்தேன்.

அவர் என்னுடைய பாவங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றார் அவர்.
ஏன்? என்று நான் கேட்டேன்?

நான் எனது வாழ்க்கை முழுவதும் அவருக்கு எதிராகத்தான் பாவம் செய்திருக்கிறேன் என்றார்!
அப்படியே நீங்கள் செய்திருந்தாலும் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உங்களுடைய பாவங்கள் நீக்கும்படி உங்களை சுத்திகரிக்கும் என்று கூறிய நான், கிறிஸ்து எப்படி இழந்துபோனவர்களைத் தேடி இரட்சிக்கும்படி இந்த உலகத்திற்கு வந்தார் என்று அவருக்கு எடுத்துக் கூறினேன்.

நமது குற்றங்களுக்காக் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். நமது பாவங்களுக்காக அவர் மரித்தார். நாம் நீதிமானாக்கப்படும்படி அவர் மறுபடியும் உயிரோடு எழுந்தார் என்று நான் கூறியதை அவர் கண்ணீரோடு கேட்டுக் கொண்டிருந்தார்.

இப்போது நாம் ஜெபிப்போம். என்று நான் கூறினேன்.
அவர் சிறைச்சாலை அறைக்குள்ளாக முழங்காற்படியிட்டார். நான் அறைக்கு வெளியே முழங்காற்படியிட்டு அவரை ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.

என்னுடைய ஜெபத்தை அவர் கேட்க மாட்டார். நான் ஜெபித்தால் அது தேவ தூஷணமாக இருக்கும் என்று அவர் மறுத்தார்.

மறுபடியுமாக தேவனை நோக்கிப் பேசும் படி நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
ஆயக்காரனைப் போல தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று அவர் கதறினார். அவருடைய அழுகையை அடக்க முடியவில்லை. மற்ற கைதிகளைப் போல அல்லாமல் தான் இழந்து போனவன் என்பதை அவர் மெய்யாகவே நம்பினார்.

நான் கம்பிகளுக்கு நடுவே கையை விட்டு அவர் கையை ஆதரவாகத் தொட்டேன். அப்போது என் கையின் மீது அவருடைய கண்ணீர்த் துளி விழுந்தது. அது என் ஆத்துமாவை அசைத்தது! அது மனந்திரும்புதலின் கண்ணீராக இருந்தது.

தொடர்ந்து உங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு ஜெபியுங்கள். இன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நான் உங்களுக்காக ஜெபிப்பேன் என்று சொல்லிவிட்டு என்னுடைய வீட்டுக்குத் திரும்பினேன்.
அடுத்த நாள் வேலைக்கு செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அப்பொழுது மறுபடியும் அந்த சிறைச்சாலையில் சந்தித்த நபரை பார்க்க வேண்டும் என்று என் மனம் விரும்பியது.

நான் வேலை செய்துகொண்டிருந்த தனியார் நிறுவனத்திற்கு போன் செய்து விடுப்பு சொல்லிவிட்டு சிறைச்சாலைக்கு விரைந்தேன்.

அங்கு என்னுடைய கண்களை என்னால் நம்ப முடியவில்லை. அவருடைய முகத்தில் காணப்பட்ட துக்கமும் வேதனையும் முழுவதுமாக மறைந்து போயிருந்தது.
அவர் முகம் பிரகாசமாகக் காட்சியளித்தது!

தம்பி நேற்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. நான் என் பாவங்களை அறிக்கையிட்டு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டேன். அவர் என்னை மன்னித்து விட்டார். என்று அவர் சந்தோஷமாக கூறினார்.
இரட்சிப்பின் சந்தோஷத்தை அவர் முகத்தில் என்னால் பார்க்க முடிந்தது.

நான் தேவனைத் துதித்தேன். தான் பாவி என்பதை அவர் ஒப்புக்கொண்டபோது கிறிஸ்து தாமே அந்த சிறைக்கு வந்து அவரை அவருடைய பாவங்களிலிருந்து விடுவித்திருக்கிறார். ஆமென்! அல்லேலூயா!!
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். (#லூக்கா 19:10)