யுத்தகாலத்தில் வடகொரியா யாருக்கு கறுப்புபணத்துக்கு ஆயுதங்கள் விற்றது? வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்.

Keerthi
2 years ago
யுத்தகாலத்தில் வடகொரியா யாருக்கு கறுப்புபணத்துக்கு ஆயுதங்கள் விற்றது? வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்.

இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட வடகொரியாவிடமிருந்து கறுப்பு பணத்தைக் கொண்டு ஆயுதம் வாங்கியதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil rajapaksha)தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறியதை அமெரிக்கா போன்ற நாடுகள் கவனிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்(Chanakkiyan) கோரிக்கை வலியுறுத்தியுள்ளார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, தாங்கள் வடகொரியாவில் இருந்து கறுப்பு டொலர்களைப் பயன்படுத்தி யுத்தத்திற்கு ஆயுதங்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஒரு நாட்டின் நிதி அமைச்சர் எவ்வாறு இவ்வாறானதொரு கருத்தைச் சொல்ல முடியும்?

பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஒருநாட்டில் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி ஆயுதம் வாங்கி இந்த யுத்தத்தை நடாத்தியதாகச் சொல்லுகின்றார்கள். இனிவரும் காலங்களில் இன்னும் இன்னும் எத்தனை உண்மைகளை நாங்கள் அறியக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை.

இந்த கருத்தைக் கொண்டு கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் அவரை முதலில் விசாரணை செய்ய வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் இதனைக் கவனிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.