வெளிநாட்டுக்கு விற்பனையாகுமா? மன்னார் கனியவழக் கடல்கள். காட்டசாட்டமான குற்றச்சாட்டு.

Keerthi
2 years ago
வெளிநாட்டுக்கு விற்பனையாகுமா?  மன்னார் கனியவழக் கடல்கள். காட்டசாட்டமான குற்றச்சாட்டு.

மன்னார் வளைகுடாவில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கனிய எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தமாக முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக எரிசக்தி அமைச்சர் மற்றும் அதிகார சபை கூறியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நீண்டகாலத்திற்கு முன்னர் மன்னார் வளைகுடாவில் இருப்பதாக கண்டறியப்பட்ட கனிய எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா? என இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 
இதற்கு பதிலளித்த அமைச்சர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இது சம்பந்தமான யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அது தொடர்பான ஆய்வு அறிக்கையை சபையில் முன்வைத்து பணிகளை முன்னெடுத்துச் செல்ல உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், மன்னார் கனிய வளம் தொடர்பான நடவடிக்கைகள் சரியான முறையில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மன்னார் தீவில் கனிய வள எண்ணெய் அகழ்வானது பேராபத்தை ஏற்படுத்தவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியர் கலாநிதி சூசை ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

கனிய வள ஆய்வுக்காக 12 மீற்றர்கள் வரை துளையிடப்படுவதால் நீர்தட்டுக்கள் உடைக்கப்பட்டு உவர் நீர் கலப்பு ஏற்படுவதோடு ஏற்கனவே வறண்ட பகுதியாக இருக்கும் மன்னாரில் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அத்துடன் மன்னாரில் மட்டும் உவர்நீர் கண்டல் சேற்றுக்கண்டல் உள்ளிட்ட கண்டல் தாவரங்கள் 874 ஹெக்டேயரில் காணப்படுகிறது. 

இந்த கண்டல் தாவரங்கள் கடல் வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட நுண்ணங்கிகள்,முலையூட்டிகள் போன்றவற்றின் இனப்பெருக்கம் மற்றும் கரியமில வாயு உட்பட சூழலை மாசுபடச் செய்யும் காரணிகளையும் உறிஞ்சுவதாக உள்ளது.

இதனைவிடவும் அன்னிய செலாவணியை பெற்றுத் தருவதாகவும் உள்ளது.அகழ்வு நடவடிக்கையால் அத்தகைய கண்டல் தாவரங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.இது ஏற்கனவே வெப்பநிலை கூடிய மன்னார் மாவட்டத்தின் சமநிலையையும் குழப்புவதாக அமையும் என அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.