தொழில் உரிமைகளை வெற்றிகொள்வதற்காக முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டங்களை நான் எதிர்க்கவில்லை - நீதி அமைச்சர் அலிசப்ரி

#SriLanka #strike #Ali Sabri
தொழில் உரிமைகளை வெற்றிகொள்வதற்காக முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டங்களை நான் எதிர்க்கவில்லை - நீதி அமைச்சர் அலிசப்ரி

தொழில் உரிமைகளை வெற்றிகொள்வதற்காக முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டங்களை நான் எதிர்க்கவில்லை. எனது கருத்தை திரிபுபடுத்தியே சமூக வலைத்தலங்களில் பிரசாரமாகி வருகின்றது. என்றாலும் அப்பாவி பொது மக்கள் சங்கடப்படும் வகையில் தொழிற்சங்க போராட்டங்கள் அமையக்கூடாது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

கேகாலை பிரதேசத்தில் சமூக சேவையில் ஈடுபட்டு வந்த தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு சமாதான நீதிவான் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று ஸ்லீக் டெப்போடில் ஹோட்டலில் இடம்பெற்றது.  இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தொழிற்சங்கங்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பாக நான் தெரிவித்திருந்த கருத்தின் உண்மையான அர்த்தத்தை தெரிந்துகொள்ளாமல் அதனை திரிபுபடுத்தி, சமூக வலைத்தலங்களில் பிழையான கருத்தில் பிரசாரமாகி வருகின்றது.

தொழிற்சங்க போராட்டம் அப்பாவி மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதுடன் அனைத்து தரப்பினருக்கும் இதனால் ஏற்படக்கூடிய சங்கடமான நிலைமை தொடர்பாக கருத்திற்கொள்ளவேண்டும் என்ற கருத்திலேயே தெரிவித்திருந்தேன்.

குறிப்பாக  பொது மக்களை நேடியாக பாதிக்கக்கூடிய சுகதாரம், பாேக்குவரத்து, மின்சாரம், நீர் போன்ற அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துவரும் நிறுவனங்களில் தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொள்ளும்போது, அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் தொடர்பாக கருத்திற்கொண்டு செயற்படவேண்டும்.

அதேபோன்று தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொள்ளும்போது பொது மக்களுக்கு ஏற்படும் அசெளகரியம் மற்றும் அதனால் நாட்டுக்கு ஏற்படும் களங்கம் தொடர்பில் இதனைவிட அதிகம் சிந்தித்து செயற்படவேண்டும்.

உதாரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதுளையை நோக்கி பயணித்த புகையிரதம் எந்தவித முன் அறிவித்தலும் இல்லாமல் இடைநடுவில் நிறுத்திவிட்டு, புகையிரத ஊழியர்கள் மேற்கொள்ள பணி பகிஷ்கரிப்பு காரணமாக, நாட்டுக்கு வந்திருந்து,

பதுளை நோக்கி சுற்றுலா சென்றுகொண்டிருந்த அதிகமான சுற்றுலா பயணிகள் அசெளகரியங்களுக்கு ஆளாகி இருந்தார்கள். இது இந்த நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.

மேலும் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை மேற்கொள்ளும்போது சிங்கப்பூர்,தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறுவதுபோல், பொது மக்களுக்கு முன்னறிவித்தில் விடுத்த பின்னர் முறையாக இந்த போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். இதன்போது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்துக்கொண்டு தொழிற்சங்க போராட்டத்தை வெற்றிகொள்ள முடியும் என்றார்.