பெண்களின் கன்னித்தன்மை பரிசோதனைக்கு தடை விதித்த இங்கிலாந்து அரசு

Keerthi
2 years ago
பெண்களின் கன்னித்தன்மை பரிசோதனைக்கு தடை விதித்த இங்கிலாந்து அரசு

பெண்களின் கன்னித்தன்மை பரிசோதனைக்கு தடை விதிக்கும் மசோதாவை இங்கிலாந்து அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ளது. அதன்படி, மருத்துவமனைகளில் கன்னித்தன்மை பரிசோதனை செய்வது சட்டவிரோத செயல் என கருத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும். 

இதுகுறித்து, சுகாதார பணியாளர்கள்  மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கன்னித்தன்மை பரிசோதனை முறையை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து,  கன்னித்தன்மை பரிசோதனைக்கு தடை விதிக்கப்படும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து அரசு உறுதி அளித்தது. 

அதன்படி, கடந்த வாரம் இங்கிலாந்து  நாடாளுமன்றத்தில், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு நல மசோதா ஒன்றில் புதிதாக, கன்னித்தன்மையை பரிசோதனை செய்யும் முறையை சட்டப்படி குற்றம் என்று அறிவித்துள்ளது.

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் வானொலியில், இந்த பரிசோதனை முறை பற்றி வெளிவந்த தகவலை கேட்டறிந்த இங்கிலாந்து  நாடாளுமன்ற உறுப்பினர்  ரிச்சர்டு ஹோல்டன்,  கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்படுவதால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து விழிப்புணர்வை அடைந்தார். அதனால் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை அவர் கொண்டு வந்துள்ளார்.

கன்னித்தன்மை பரிசோதனை முறையை தடை செய்யும் மசோதாவை நார்த்வெஸ்ட் டுர்ஹாம் எம்.பி ரிச்சர்ட் ஹோல்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்களின் ராயல் கல்லூரி  வரவேற்பு அளித்துள்ளது.

நீண்ட காலமாக பெரும்பாலான சமூகத்தில், ஒரு பெண் முதல் முறையாக உடலுறவு கொள்ளும் போது இரத்தம் வெளிப்படுவது அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்று கருத்தப்பட்டு வருகிறது. பெண்ணுறுப்பில் இருக்கும் கருவளையம் எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிந்து, அது சரியாக இல்லையெனில் அந்த பெண் கன்னித்தன்மையை இழந்துவிட்டதாக கருதப்படுகிறது. ஆனால் இது முற்றிலும் தவறான கணிப்பு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

'கன்னித்தன்மை' பரிசோதனை என்பது மருத்துவ நிபுணரால் கருவளையப் படலத்தின் காட்சி பரிசோதனையை உள்ளடக்கியது.இதில் 'இரண்டு விரல்' சோதனை அடங்கும்.இந்த முறையை உலக சுகாதார அமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது. அது பெண்களின் உடலை காயப்படுத்தும் முறை என்று கூறியுள்ளது.

20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த பரிசோதனை முறை நடைமுறையில் உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், பல பெண்கள் பிறக்கும் போதே இந்த கருவளையம் இல்லாமல் அவர்கள் உடல் வளர்கிறது. அல்லது பல்வேறு காரணங்களால் இந்த கருவளையம் பாதிப்படைகிறது, எனவே இதனை மையமாக வைத்து கன்னித்தன்மை பரிசோதனை செய்யும் முறை முற்றிலும் தவறானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள இந்திய தொழிலாளர் சங்கத்தின் இயக்குனர் பால்ராஜ் புரேவால், கன்னித்தன்மை பரிசோதனை முறை ஏன் தடை செய்யப்பட வேண்டும் என்பதற்கு 1979ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார். 

‘இங்கிலாந்தின் மிகப்பெரிய விமானநிலையமான ஹீத்ரோ விமானநிலயத்துக்கு ஒருநாள்  வந்திறங்கிய இந்திய வம்சாவளி தம்பதியினருக்கு இந்த கொடுமை நேர்ந்துள்ளது. விமான நிலையத்தில் வைத்து அந்த 35 வயதான இந்திய பெண்ணுக்கு விமானநிலைய மருத்துவ அதிகாரிகள் "கிளியரன்ஸ் இன்டர்வியூ"க்காக தனியாக அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். அதன்பின் வெளியே வந்த அந்த பெண் மயக்கமடைந்த நிலையில் இரத்தபோக்குடன் வந்துள்ளார். அப்போது தான் அவருக்கு 2 விரல் முறையிலான கன்னித்தன்மை பரிசோதனை நடந்தது தெரிய வந்தது.

பள்ளி ஆசிரியையான அந்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. திருமணம் உள்ளிட்ட விஷயங்களில்அந்த பெண் பொய் கூறியுள்ளார் என சந்தேகப்பட்ட விமான நிலைய  அதிகாரிகள் அவருக்கு இந்த பரிசோதனையை  செய்துள்ளனர். 

இந்த தவறான செயலுக்கு பின் இழப்பீடாக அந்த பெண்ணுக்கு குடியேற்றம் மற்றும் சட்ட ஒழுங்கு துறை சர்பில் 500 ஐரோப்பிய டாலர்கள் வழங்கப்பட்டது.

இதை போல பல ஆண்டுகளாக, 1979ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தெற்காசியாவை சேர்ந்த 120 முதல் 140 பெண்கள் வரை  இத்தகைய மருத்துவ பரிசோதனை முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் டெல்லியை சேர்ந்த 73 பேர், மும்பையை சேர்ந்த 10 பேர் உள்ளிட்டோர் அடங்குவர்.

ஆனால் உள்துறை அமைச்சகம் இந்த தவறான நடவடிக்கைகளுக்கு முறையான மன்னிப்பை கேட்கவில்லை.43 ஆண்டுகளாக நடைபெற்ற எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களுக்கு பின் தற்போது சட்டமாக மாற்றப்பட்டுள்ளது’.

இது தொடர்பாக வந்த பத்திரிகை செய்தியில், 

‘பல தனியர் மருத்துவமனைகள், மருந்தகங்கள், கிளினிக்குகள் போன்றவை பெண்கள் இழந்த கன்னித்தன்மையை திரும்ப செய்யும் அறுவை சிகிச்சை முறை (ஹைமனோபிளாஸ்டி) மேற்கொள்ளப்படும் என்று விளம்பரப்படுத்தி வந்தன. அதாவது ஹைமனோபிளாஸ்டி என்பது உடைந்த கருவளையத்தை மறுகட்டமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு அறுவை சிகிச்சை ஆகும். அதன் மூலம் உடலுறவு கொள்ளும் போது இரத்தப்போக்கு ஏற்படும்.

அந்த அறுவை சிகிச்சையில் திசுக்களை வைத்து  பெண்ணுறுப்பில் போலியான கருவளையத்தை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைப்பார்கள். அதன்மூலம் அடுத்த முறை பெண்கள் உடலுறவு கொள்ளும் போது இரத்தம் வெளிப்படும் வாய்ப்பு உருவாகும்.இதனால் அதிக இளம் பெண்கள் இந்த அறுவை சிகிச்சை முறையை நாடி வருகின்றனர்.

ஐரோப்பிய டாலர் மதிப்பில் இந்த அறுவை சிகிச்சை முறைக்கு 3000 டாலர்கள் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது’ என்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.