இலங்கைக்கு எதிராக மறைமுக போற்கொடிதூக்க உலக நாடுகள் இணைந்து செயலாற்றுகிறது. ஜனாதிபதி ஊகம். காரணம் சீனாவா?

Keerthi
2 years ago
இலங்கைக்கு எதிராக மறைமுக போற்கொடிதூக்க உலக நாடுகள் இணைந்து செயலாற்றுகிறது. ஜனாதிபதி ஊகம். காரணம் சீனாவா?

உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் இலங்கைக்கு எதிரான சக்திகள் ஒன்று திரள்வதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய தலைமைத்துவத்துக்கு எதிரான சக்திகள் மிகச் சூட்சுமமான பல பொய்ப் பிரசாரங்களினூடாக மக்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயல்வதாகவும், இது தொடர்பில் மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற இலங்கையின் 74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு தேசத்துக்காக உரையாற்றும் போதே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்தார்.

“ சில விடயங்களில், உள்நாட்டைப் போன்று அந்நிய சக்திகளும் எம்மை எதிர்த்து ஒன்று கூடுகின்றன. சிலவேளை உங்களது பக்கத்தில் நிகழும் செயல்கள் எல்லாம் உங்களுக்கு எதிராக நடக்கும் சதியாகத் தோன்றும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

மக்கள் தலைவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது, இவ்வனைத்துப் பிரச்சினைகளையும் முகாமைத்துவம் செய்துகொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே தவிர பிரச்சினைகளிலிருந்து தப்பி ஓடுவதல்ல. அதற்குத் தேவையான ஆக்கமுறையான உளப்பாங்கு எம்முள் இருக்கின்றது.

நாடு எதிர்கொள்கின்ற எந்தவொரு சவாலையும் வெற்றி காண்பதற்காக தலைமைதாங்க நான் எப்பொழுதும் தயாராக இருக்கின்றேன்.

நாட்டுக்கு அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் எமக்குப் பெரிய வளமாக இருக்கின்றார்கள். 

கடந்த காலத்தில் அவர்கள் நாட்டுக்காக முன்வந்து பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்து எமக்கு ஒத்துழைப்பு நல்கியதை நாம் மறக்கவில்லை. அவர்கள் தொடர்ந்தும் எமது பொருளாதாரதுக்காகத் தொடர்ந்து வழங்கும் பலம் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் எல்லோரையும் பிறந்த நாட்டில் முதலீடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். 
அதன்மூலம், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக மேலும் செயலாக்க முறையில் பங்களிக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது.

தேசிய தலைமைத்துவத்துக்கு எதிரான சக்திகள் மிகச் சூட்சுமமான பல பொய்ப் பிரசாரங்களினூடாக மக்களைத் தவறான பாதையில் எடுத்துச் செல்ல முயல்கின்றன. 
எப்போதும் மதிநுட்பத்துடன் நடந்து கொள்ளுமாறு இந்நாட்டு மக்களை நான் கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.