தீப்பற்றி எரியும் வாகனத்திலிருந்து நாயைக் காப்பாற்றிய அமெரிக்க காவல் உயரதிகாரி
அமெரிக்காவில் உள்ள டக்லஸ் (Douglas) மாவட்டத்தில் தீப்பற்றி எரியும் வாகனத்திலிருந்து நாயைக் காப்பாற்றினார் அப்பகுதியின் காவல் உயரதிகாரி கிரகரெக் (Gregorek).
ஜனவரி 22ஆம் தேதி அன்று சுமார் 4.30 மணி அளவில் கார் ஒன்று தீப்பற்றியதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. அதை விசாரிக்கப் போன இடத்தில் காரின் சன்னல் வழியாகப் புகை வருவதை அவர் கண்டார்.
வாகனத்திற்கு அருகே இருந்த ஒருவர், தமது நாய் காரின் உள்ளே சிக்கியிருப்பதாகக் கூறி உதவிக்குக் குரல் கொடுத்தார். உடனே திரு கிரகரெக் தமது கைத்தடியால் காரின் சன்னலை உடைக்கத் தொடங்கினார்.
சன்னலை உடைத்ததும் நாயின் உரிமையாளர் அதை வெளியே இழுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அப்போது திரு கிரகரெக் வாகனத்திற்குள் நுழைந்து நாயை வெளியே இழுத்துக் காப்பாற்றினார்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் கால்நடை மருத்துவர் நாயைப் பரிசோதித்து அது நலமாக இருப்பதை உறுதிசெய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.